tamilnadu

ரிதன்யா வழக்கு விசாரணையில் தொய்வு தந்தை முறையீட்டை தொடர்ந்து மாமியார் கைது

ரிதன்யா வழக்கு விசாரணையில் தொய்வு தந்தை முறையீட்டை தொடர்ந்து மாமியார் கைது

திருப்பூர்,  ஜூலை 4 - இளம்பெண் ரிதன்யா வழக்கு விசாரணை தொய்வாகப் போய்க் கொண்டிருப்பதாகவும், முழுமையாக ஆதாரங்களைத் திரட்டி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என ரிதன்யாவின் தந்தை முறையிட்ட நிலையில், அவரது மாமியாரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வெள்ளியன்று வந்து, காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் அசோக்கை சந்தித்துப் பேசிய ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:  எஸ்.பி.யைப் பார்த்து கோரிக்கை வைத்தோம். எல்லா ஆதாரங்களையும் கைப்பற்றி உரிய தீர்வு பெற்றுத் தருவதாக எஸ்.பி. உறுதி கூறினார். என் மகளின் கால் ரெக்கார்ட், மாப்பிள்ளை யார் யாருடன் எல்லாம் பேசினான், உறவினர்கள், சுற்றத்தாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் பெண்ணிற்கு நடந்த அவலத்தைத் தெரிந்த யார் வேண்டுமானாலும் வாக்குமூலம் கொடுக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.  இதுவரை 30 பேரிடம் விசாரணை மேற்கொண்டிருப்பதாக எஸ்.பி. தெரிவித்திருக்கிறார். எனது மகளின் மாமியாரான சித்ராதேவி உடல்நிலை சரியில்லை என்று காவல் துறையினர் கைது செய்யாமல் விட்டிருக்கிறார்கள். இது சரியல்ல. அவரைக் கைது செய்திருக்க வேண்டும். தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை கொடுத்தால் இனிமேல் எந்த பெண்ணுக்கும் இதுபோல் நடக்காது என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து.  இவ்வாறு அண்ணாதுரை கூறினார்.  இதனிடையே, சேவூர் காவல் நிலையத்தில் சித்ராதேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.