tamilnadu

img

திருப்பரங்குன்றத்தில் சாதகமான முடிவு வர வேண்டுமாம் மோகன் பகவத் பகிரங்க மிரட்டல்

திருப்பரங்குன்றத்தில் சாதகமான முடிவு வர வேண்டுமாம் மோகன் பகவத் பகிரங்க மிரட்டல்

சென்னை, டிச. 11 - திருப்பரங்குன்றம் விவகாரத்தின் முடிவு, இந்துத்துவ சக்திகளுக்கு சாதகமானதாகவே இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்-சின் நூற்றாண்டை, நாடு முழுவதும் அந்த அமைப்பு கொண்டாடி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டுள்ளார். அப்போது, அவரிடம் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், நீதிமன்றம் விசாரித்து வருவதால், அதனை பெரிதுப்படுத்த தேவையில்லை என்று கூறிய அதேநேரத்தில், “இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் தான், திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்” எனவும், மேலும், “இந்துக்களுக்கு சாதகமாகத் தான் இப்பிரச்சனைக்கான முடிவு இருக்க வேண்டும்” என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் மோகன் பகவத் கூறியுள்ளார். அரசாங்கத்தை, நீதிமன்றங்களை மிரட்டும் வகையிலான மோகன் பகவத்தின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சிபிஎம் மாநிலச் செயலாளர்  பெ. சண்முகம் கண்டனம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சமூகவலைதள பக்கத்தில் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். “திருப்பரங்குன்றம் விவகாரம் இந்துக்களுக்குச் சாதகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் மிரட்டல் விடுத்திருக்கிறார். அவர் குறிப்பிடுவது சராசரி இந்துக்களை அல்ல! மாறாக, மதக் கலவரங்களில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளில் உள்ள மத வெறியர்களுக்குச் சாதகமாக இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான்.  இல்லை என்றால், எதை வேண்டுமானாலும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதும் அந்த மிரட்டலில் மறைந்திருக்கும் உண்மையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.  மேலும், “மத நல்லிணக்கத்தை பாதுகாக்க தமிழ்நாடு சமரசமின்றி போராடும் என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு உரத்த குரலில் சொல்வோம்” என்று பெ. சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.