தஞ்சாவூர் தேரோடும் வீதிகளில் மேயர் சண்.ராமநாதன் ஆய்வு
தஞ்சாவூர், ஏப்.25- தஞ்சையில் தேரோடும் வீதிகளில் தடுப்புக்கட்டைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மேயர் சண்.ராமநாதன் கூறினார். தஞ்சை பெரியகோவிலில் சித்திரை பெருவிழா கடந்த ஏப்.23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தெடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 7-ம் தேதி நடைபெறுகிறது. தேரோட்டம் நடை பெறுவதையொட்டி, தஞ்சையில் உள்ள 4 வீதிகளில் மேயர் சண்.ராமநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தஞ்சை மேலவீதியில் இருந்து ஆய்வை தொடங்கிய அவர், வடக்கு வீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி ஆகிய 4 வீதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர் மேயர் சண்.ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேரோடும் 4 வீதிகளிலும் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தப்படும். பாதாள சாக்கடை மூடி உயரமாக உள்ள இடங்களில் சாலையை அதே மட்டத்திற்கு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் வடிகால்களையொட்டி தடுப்புக்கட்டைகள் அமைக்கப்படும். பொதுமக்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்படும். 4 வீதிகள் மற்றும் தேர்முட்டிகள் உள்ள பகுதிகளை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை அகலப்படுத்தப்பட்ட இடங்களில் புதிதாக சாலை போடப்படும். சாலையின் மையப்பகுதியில் தேர் செல்லும் வழியில் இருபுறமும் கோடுகள் வரையப்படும். மேலும், பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். அப்போது மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், உதவி செயற்பொறியளர் ரமேஷ், மண்டலக்குழு தலைவர் மேத்தா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.