மாற்றுத்திறனாளிகள் சங்க மயிலாடுதுறை வட்ட மாநாடு கோரிக்கை
சுயதொழில் தொடங்க நிபந்தனையற்ற கடன் வழங்குக!
மயிலாடுதுறை, ஜூலை 7- மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மயிலாடுதுறை வட்ட 5 ஆவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர் யூ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டத் துணைத் தலைவர் கே. ஆனந்தன் கொடியேற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானத்தை வட்ட துணைச் செயலாளர் வெள்ளம் சாருமதி வாசித்தார். கிளைச் செயலாளர் சி. ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எம். புருஷோத்தமன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். வேலை அறிக்கையை வட்ட துணைச் செயலாளர் எஸ். சுந்தரபாண்டியன் முன் வைத்தார். வரவு -செலவு அறிக்கையை வட்டப் பொருளாளர் சொக்கலிங்கம் முன்வைத்தார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட தலைவர் டி.கணேசன், மாவட்டத் துணைத் தலைவர் டி. கோவிந்தசாமி, மாவட்டப் பொருளாளர் ஜி. லட்சுமி உரையாற்றினர். ஆந்திராவைப் போல் மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். நூறு நாள் வேலையில் முழு சம்பளமும் நான்கு மணி நேரப் பணியும் வழங்க வேண்டும். சுய தொழில் தொடங்க நிபந்தனையற்ற கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 19 பேர் கொண்ட ஒன்றியக் குழுவும், 5 பேர் கொண்ட நகர அமைப்புக் குழுவும் தேர்வு செய்யப்பட்டு தலைவராக யூ. ராஜேந்திரன், துணைத் தலைவர்களாக என். சொக்கலிங்கம், சபாஅருள் மணி, செயலாளராக என். செபஸ்தியன், துணைச் செயலாளர்களாக எஸ். சுந்தரபாண்டியன், எல்.எம். சாருமதி, பொருளாளராக கே. ஆனந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நகர அமைப்பு குழுவாக கே. கண்ணன், கே. முருகேசன், காளிமுத்து, பாலமுருகன் பா. கார்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக மாநிலத் துணைத் தலைவர் ரமேஷ் பாபு நிறைவுரையாற்றினார்.