‘தராசுத் தட்டை ஒரு பக்கமாக இழுத்த கனமான நகரம் மதுரை’\
மதுரை, செப். 15 - மதுரையில் நடைபெற்று வரும் 25வது புத்தகத் திருவிழாவில் “செப்புவது உடையேன்” மற்றும் “தமிழ் வாழ்வியல்” தலைப்புகளில் நடைபெற்ற சிறப்புரைகள் தமிழின் தொன்மையையும் நாகரிகத்தையும் வெளிப்படுத்தின. மதுரையின் சிறப்பு “செப்புவது உடையேன்” தலைப்பில் உரையாற்றிய தமுஎகச தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், மதுரையின் தனித்துவத்தை சிலப்பதிகார நீதிமன்றக் காட்சியுடன் இணைத்து விளக்கினார். “ஒரு ஊருக்குச் சென்றால், அங்கு உள்ள இடங்களுக்கு வழி சொல்லு வார்கள். ஆனால் மதுரை மட்டும் தான் வாழ்வதற்கே வழி சொல்லும் ஊர். இதை நான் சொல்வதில்லை – பரிபாடல் சொல்கிறது” என்று தொடங்கிய அவர், “உலகத்தில் உள்ள எல்லா நகரங் களையும் ஒரு தராசு தட்டிலே வைத்து, மதுரை என்ற நகரத்தை மற்றொரு தட்டில் வைத்தாலும், மதுரை தான் அதிகமான சிறப்புகளை பெற்றி ருப்பதால் அந்தத் தட்டு கீழே தாழ்ந்து விடும்” என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே பரிபாடல் கூறியதை நினைவு படுத்தினார். மதுரையின் பெயர்களான தூங்கா நகரம், நாளங்காடி, அல்லங்காடி, மூதூர், விழாக்களின் நகரம் ஆகிய வற்றையும் விளக்கினார். முன்பு சிம்மக்கல் பகுதியில் மட்டும் தான் காய்கறி, பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இன்று மாட்டுத் தாவணி பகுதியில் விடிய விடிய காய்கறிகள் இறக்கப்படுகிறது என்றும் கூறினார். பிரியாணி பற்றிய சிறப்பான உவமையும் தந்தார். “பிரியாணி என்பது ஓர் அற்புதமான உணவு. அது நான் சொல்வதில்லை – சீத்தாராம் யெச்சூரி அவர்கள் கூறியது. அவர் திண்டுக்கல் வந்தபோது ‘பிரியாணி இந்தியா மாதிரி’ என்று சொன்னார். ஏன் என்றால், பிரியாணியில் அரிசி, மசாலா, இறைச்சி, தண்ணீர் – இவை எல்லாம் சேர்ந்தால்தான் சுவை வரும். அதுபோலவே இந்தியாவும் பல் வேறு இன, மதம், மொழிகள் சேர்ந்திருப்ப தால்தான் சிறப்பாக உள்ளது” என்றார். “மீனாட்சி அம்மன் கோவில் ஒரு தாமரை மொட்டு போலும், அதைச் சுற்றியுள்ள ஆடி வீதி, மாசி வீதிகள் தாமரை இதழ்கள் போலும் இருக்கின் றன. அப்படி ஒரு அற்புதமான நகரம் மதுரை மாநகரம்” என்ற காமராஜரின் பாராட்டையும் மேற்கோள் காட்டினார். தமிழ் வாழ்வியல் “தமிழ் வாழ்வியல்” தலைப்பில் பேசிய சொற்பொழிவாளர் சுகி. சிவம், புத்தகங்களின் முக்கியத்து வத்தையும் தமிழ் நாகரிகத்தின் பரிமாணங்களையும் எடுத்துரைத்தார். “மனித இனத்திற்கான மிகப் பெரிய அடையாளம் – புத்தகம் படித்தல்” என்று தொடங்கிய அவர், திரு வள்ளுவரின் “விலங்கொடு மக்கள் அனையர்; இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்ற குறளை மேற்கோள் காட்டி, “நூல் கற்றவர்களே மனிதர்; கற்றிடாதவர் விலங்குகளோடு ஒப்பானவர்” என்று வலியுறுத்தினார். “விலங்குகளும் அனுபவங்களை சேமிக்கின்றன, ஆனால் அவற்றை தொகுத்து ‘புத்தகம்’ ஆக்கத் தெரி யாது. மனிதன் தான் தனது அறிவை எழுத்தில் பதிந்து அடுத்த தலை முறைக்கு பரப்பத் தொடங்கியவன்” என்றார். கீழடி அகழாய்வு மூலம் தமிழ ரின் பெருமை உலகமெங்கும் பரவி யதையும், அதில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் பங்களிப்பையும் பாராட்டினார். தமிழ் நாகரிகத்தின் சான்றுகள் சுகி சிவம் வரலாற்றுச் சான்றுகளை விரிவாக எடுத்துரைத்தார். திருச் செந்தூரில் முருகன் சுப்பிரமணிய னாகக் கூறப்படுவதும், திருப்பரங்குன் றத்தில் பாறையில் செதுக்கப்பட்ட முரு கன் சிலையும், கண்ணப்ப நாயனார் சிலையில் செருப்பு காணப்படுவதும் தமிழரின் முன்னேற்றமான நாக ரிகத்தைக் காட்டுகின்றன என்றார். “பிரிட்டிஷ் ஆளுநர் ‘இந்த மக்கள் நாகரிகமற்றவர்கள்’ என்று அவமதித்த போதும், நம் நிலத்தில் ஏற்கனவே செருப்பு அணிந்த சிற்பங்கள் இருந் தன!” என்று சுட்டிக்காட்டினார். பழைய சமண முனிவர்கள் கல்வி கற்பித்த இடங்களே “பள்ளி” என்றும், அதுவே இன்று “ஸ்கூல்” என்ற சொல் லின் வேராகியது என்றும் கூறினார். தமிழர்கள் சமண முனிவர் காலில் பெண்கள் வெள்ளை புடவை அணிந்து வந்து படங்கள் எடுத்ததின் அடிப்படை யில் தான் சரஸ்வதி என்ற கல்வி கட வுளுக்கு வெள்ளை புடவை அணி வித்து வணங்கினர் என்றார். “பெண்மைக்கு அளிக்கப்பட்ட மரி யாதை – காவல் தெய்வங்களே கண்ணி மைக்காமல், திறந்த கண்களோடு வைக்கப்பட்டுள்ளன. பெண்ணை ஒடுக்க முடியாது என்பதற்கான அடை யாளம்” என்றார். “மொழி என்பது வெறும் எழுத்தல்ல; அது வாழ்வியலின் அடையாளம். ஒரு பழங்குடி மக்களின் மொழி அழிந்தால் அது சொற்களின் அழிவு அல்ல; அவர்களின் அறிவின் அழிவு” என்று மொழியின் முக்கியத்துவத்தை வலி யுறுத்தினார். தெற்கில் எழுச்சி எட்டாவது நாள் நிகழ்ச்சியில் “தெற்கில் எழுச்சி” தலைப்பில் பேசிய தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணா நிதி, தமிழரின் வணிக மற்றும் போர் வரலாற்றை எடுத்துரைத்தார். “சேரர், சோழர், பாண்டியர்கள் தங்கள் படைத்திறமையின் காரணமாக கடல் கடந்தும் வெற்றி வாகை சூடினர். ஆனால் வெற்றி பெற்றபோதும் அந்த நாட்டு மக்கள் மீதும், பண்பாடுகள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் தமிழர்களுக்கு கிடையாது” என்று தமிழரின் நாகரிக அணுகுமுறையை பாராட்டினார். மொழியின் தொன்மை தமிழ் மொழி பழங்காலம் தொட்டு இன்று வரை மக்கள் பயன்பாட்டில் உள்ள தொன்மையான மொழி என்று குறிப்பிட்ட கனிமொழி, “நமது முன்னோர்கள் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பு கருவிகளை பயன்படுத்தியுள்ளனர் என்பதை உரிய சான்றுகளுடன் நிரூபித்துள்ளோம். ஆகவே இனி உலக வரலாறு எழுத வேண்டுமெனில் தமிழகத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்” என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் பாராட்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசுகையில், தூத்துக் குடி மாவட்ட வளர்ச்சியையும் புத்தகத் திருவிழா நடத்துவதிலும் காட்டும் ஆர்வத்தையும் பாராட்டினார். “தூத்துக்குடிக்கும் மதுரைக்கும் இடை யில் சில நாட்களாக ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கின்றது. தென் மாவட்ட வளர்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி, முதலீடு சார்ந்த வளர்ச்சி மிகவும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது” என்றார். “1980-90 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களாக இருந்தபோது பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற நாங்கள், தமிழ், மொழி, பண்பாடு, வரலாறு என்று வரும்போது எதிரில் இருக்கின்ற எவ ரோடும் சமரசம் செய்யாத ஒரு பண்புட னும், ஒற்றுமையுடனும் செயல்பட் டோம்” என்று கூறினார். தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் பேசும்போது ஆதிச்சநல்லூர் அக ழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிறு பட்ட யத்தை செம்பு பட்டயம் என்று சொல்லி யபோது, கனிமொழி அவர்கள் “அது செம்பு பட்டயம் அல்ல, தங்கப்பட்டயம்” என்று தகவல் அனுப்பிய நிகழ்வையும் பகிர்ந்து கொண்டார். “அந்த ஆர்வம் இருப்பது முக்கியம். அது எவ்வளவு அறிவு, கூர் உணர்வோடு இருந்து, எவ்வளவு ஈடுபாட்டோடு செயல்படு கிறார் என்பதையும் காட்டுகிறது” என்றார். புத்தகத் திருவிழாவின் இந்த நிகழ்ச்சிகளும், உரைகளும் தமிழின் தொன்மை, நாகரிகம், மொழியின் சிறப்பு மற்றும் தமிழரின் போரியல் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தின. மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவின்குமார் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சிகள் தமிழ்ப் பண் பாட்டின் மீதான பெருமை உணர்வை வளர்த்தன.
- ஜெ.பொன்மாறன்