tamilnadu

img

எல்டிஎப் 3.0 வெற்றி நிச்சயம்!

எல்டிஎப் 3.0 வெற்றி நிச்சயம்! 

கேரள அரசியல் வரலாற்றில் தொடர் ஆட்சி என்ற சாதனையைப் படைத்த இடது ஜனநாயக முன்னணியின் (LDF) நாயகன், முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களிடம், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கேரளத்தின் பல்வேறு ஊடகங்கள் தொடர்ந்து நேர்காணல் கண்டு வருகின்றன. ‘மீடியா ஒன்’ ஊடகத்திற்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணல் இங்கு தரப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகால இடது ஜனநாயக முன்னணி ஆட்சியின் சாதனைகள், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள், சபரிமலை விவகாரம், மதவாத அமைப்புகளுடனான மோதல் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் மிகத் தெளிவாகவும், நிதானமாகவும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்த விரிவான நேர்காணலின் முழு வடிவம் இதோ:

தேர்தல் களம் மற்றும் வியூகங்கள்

கேள்வி: ஏப்ரல் 9 தேர்தல் என்பது மிக நெருக்கமான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்திற்குப் போதிய அவகாசம் கிடைக்குமா? பினராயி விஜயன்: பிரச்சாரத்திற்கான காலம் குறைவாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேக மில்லை. ஆனால், தேர்தல் ஆணையம் ஒரு தேதியை அறிவித்துவிட்டால், அதற்கேற்பத் தயாராவதுதான் அரசியல் கட்சிகளின் வேலை.

இடது ஜனநாயக முன்னணி(எல்டிஎப்) ஏற்கெனவே அடிமட்ட அளவில் பணிகளைத் தொடங்கிவிட்டது. எங்களைப் பொறுத்த வரை இது ஒரு கூட்டுச் செயல்பாடு. எனவே, இந்தக் குறுகிய காலத்தைப் பயனுள்ள முறையில் கையாளுவோம்.  கேள்வி: மலப்புறத்தில் உள்ள தானூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் எல்டிஎப் வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இது தேர்தல் களத்தில் ஒரு நடைமுறைச் சிக்கலாக மாறாதா? பினராயி விஜயன்: எந்தச் சிக்கலும் இருக்காது.

மிக விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். வேட்பாளர் தேர்வு என்பது ஒரு ஜனநாயக நடைமுறை. ஒவ்வொரு தொகுதியின் சமூகக் கட்டமைப்பு மற்றும் வெற்றி வாய்ப்புகளை ஆய்வு செய்தே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். அது சரியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.  கேள்வி: காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்விலேயே பெரும் குழப்பங்கள் நீடித்தன. பல மோதல்கள் வந்தன. இறுதியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். இந்த அதிகாரப் போட்டியை எல்டிஎப் அரசியலில் சாதகமாகப் பயன்படுத்துமா? பினராயி விஜயன்: அது எந்த அளவுக்கு அரசியலில் எதிரொலிக்கும் என்பதை வரும் நாட்களில் மக்கள் முடிவு செய்வார்கள். சில தர்க்கங்கள் பேசித் தீர்க்கப்படும், சில நீடிக்கும். கே.சுதாகரன் போன்ற தலைவர்கள் அவர்களது கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டது ஒரு நல்ல விஷயம் என்று நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன்.

ஒரு கட்சித் தலைவர் கட்சி முடிவுக்குக் கட்டுப்படுவது ஜனநாயகப் பண்பு. அவர்கள் தரப்பு பிரச்சனைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். மக்கள் எங்களின் கடந்த பத்து ஆண்டுகால சாதனைகளை மட்டுமே பார்ப்பார்கள். தர்மடம் தொகுதி மற்றும் மக்கள் செல்வாக்கு கேள்வி: தர்மடம் தொகுதியில் நீங்கள் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறீர்கள். கடந்த முறை 50,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள். இந்த முறை உங்களது எதிர்பார்ப்பு என்ன? பினராயி விஜயன்: அது மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம். கடந்த காலங்களில் மக்கள் என்னை மிகச் சிறப்பாக வரவேற்றுள்ளனர் என்பதுதான் எனது அனுபவம்.

இந்த முறை 2021-ஐ விட அதிக வாக்குகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். இதுவரையில் மக்களிடம் எந்தவிதமான அதிருப்தியையும் நான் உணரவில்லை. மக்கள் எப்போதுமே உண்மையான வளர்ச்சிக்கும், நேர்மையான அரசியலுக்கும் ஆதரவளிப்பார்கள்.  கேள்வி: நீங்கள் மற்ற மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது. உங்கள் தொகுதியில் வெறும் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே செலவிட முடியும். இது ஒரு சவாலல்லவா? பினராயி விஜயன்: ஆம், நான் மாநிலம் முழுவதும் செல்ல வேண்டியுள்ளது. ஏப்ரல் 4 முதல் 6 வரை மட்டுமே எனது தொகுதியில் இருக்க முடியும். எனது வரம்புகளை மக்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் அதை ஒரு குறையாகக் கருத மாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்குத் தெரியும் நான் ஒட்டுமொத்த கேரளத்திற்காக உழைக்கிறேன் என்று. எனது தொகுதியின் தோழர்களும் மக்களும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். அமைச்சரவை செயல்பாடு மற்றும் விமர்சனங்கள் கேள்வி: நீங்கள் இரண்டு அமைச்சரவைகளை வழிநடத்தியுள்ளீர்கள். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எது அதிகத் திருப்தியைத் தந்தது? பினராயி விஜயன்: இரண்டுமே திருப்திகரமானவை தான்.

அமைச்சர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக ஒத்துழைத்தனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுந்த சவால்களை அவர்கள் முதிர்ச்சியுடன் கையாண்டனர். இரண்டாவது அமைச்சரவையில் இளைஞர்கள் அதிகம் இருந்த போதிலும், அவர்கள் திறமையாகச் செயல்பட்டார்கள். அமைச்சரவை என்பது ஒரு குழு (Team). அந்தக் குழு சிறப்பாகச் செயல்படும்போது தலைமைக்கும் திருப்தி கிடைக்கிறது.  கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், இது ஒரு பலவீனமான அமைச்சரவை என்று விமர்சித்துள்ளாரே? 2016 அமைச்சரவை இதைவிடப் பரவாயில்லை என்பது அவர் கருத்து. பினராயி விஜயன்: அது ஒரு அரசியல் விமர்சனம் மட்டுமே, அதில் உண்மையில்லை. ஒரு துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குப் பதிலாகப் புதியவர்கள் வரும்போது இத்தகைய விமர்சனங்கள் வருவது இயல்பு. ஆனால், இந்தப் புதிய அமைச்சர்கள் மிகக் குறுகிய காலத்தில் தங்களின் திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளனர். எங்களை விமர்சிப்பவர்கள் உண்மையான தரவுகளைப் பார்ப்பதில்லை, வெறும் அரசியலை மட்டுமே பேசுகிறார்கள். ஆட்சிக்கு எதிரான மனநிலை குறித்து (Anti-incumbency) கேள்வி: கடந்த 10 ஆண்டுகளில் பல நலத்திட்டங்களைச் செய்துள்ளீர்கள். 2000 ரூபாய் வரை ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது. இது ஆட்சிக்கு எதிரான மனநிலையை மாற்ற உதவுமா? பினராயி விஜயன்: கேரளத்தில் இன்று ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பது இல்லை. மக்கள் விரும்பிய பல திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. நீங்கள் ஒரு குடும்பத்தைச் சந்தித்துப் பேசினால், அரசின் திட்டங்களால் அவர்கள் அடைந்த பலன்களைக் கூறுவார்கள். ஒரு தார்மீகத் திருப்தி மக்களிடம் நிலவுகிறது.

குறிப்பாக, இக்கட்டான கோவிட் காலங்களில் மக்கள் பட்டினியின்றி வாழ்வதை இந்த அரசு உறுதி செய்தது. அந்த நன்றியுணர்வு மக்களிடம் இப்போதும் இருக்கிறது.  கேள்வி: அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்த அதிகப் பணம் செலவிடப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே? இது உங்களின் நம்பிக்கையின்மையைக் காட்டுகிறதா? பினராயி விஜயன்: இல்லை. 10 ஆண்டுகால அனுபவங்களை மக்களுக்கு நினைவூட்ட வேண்டியது அரசின் கடமை. இன்று பல ஏஜென்சிகள் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படுகின்றன. ‘கோயபல்ஸ்’ பாணியில் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மை ஆக்கப் பார்க்கிறார்கள். அதற்கு உண்மைகளை முன்வைத்து பதிலளிக்க வேண்டியது அவசியம்.

2016-இல் யு.டி.எப் செய்த விளம்பரங்களை விட நாங்கள் குறைவாகவே செய்கிறோம். பையனூர், தளிப்பரம்பா போன்ற உட்கட்சி விவகாரங்கள் கேள்வி: பையனூர் மற்றும் தளிப்பரம்பா தொகுதிகளில் சிபிஐ(எம்)-லிருந்து விலகிச் சென்றவர்கள் யுடிஎப் வேட்பாளர்களாக நிற்கிறார்கள். நிதி முறைகேடு மற்றும் வாரிசு அரசியல் புகார்களை அவர்கள் முன்வைக்கிறார்களே? பினராயி விஜயன்: பையனூர், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆணிவேர் போன்றது. ஏ.வி.குஞ்ஞம்பு, பி.குஞ்ஞிராமன் போன்ற மகத்தான தலைவர்கள் வழிநடத்திய மண் அது. அங்கு நிதி முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று மாவட்டக் குழு ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளது. குஞ்ஞிகிருஷ்ணன் போன்றவர்கள் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே செயல்படுகிறார்கள். கட்சி ஒரு தாயைப் போன்றது, தவறு செய்பவர்களைத் திருத்த முயலும். ஆனால் அவர்கள் திருந்தாமல் எதிரிகளின் கையில் கோடாரிக் காம்புகளாக மாறினால் மக்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.

தளிப்பரம்பாவைப் பொறுத்தவரை, எம்.வி.கோவிந்தன் மாஸ்டரின் மனைவி ஷியாமளா டீச்சர் மீது “வாரிசு அரசியல்” என்று புகார் கூறுவது அறியாமை. அவர் கோவிந்தன் மாஸ்டரைத் திருமணம் செய்வதற்கு முன்பே பொதுவாழ்வில் இருந்தவர். டி.ஒய்.எப்.ஐ நிர்வாகியாக இருந்த காலத்திலிருந்தே கட்சியில் உழைத்தவர். தகுதியின் அடிப்படையில் தான் வேட்பாளர் தேர்வு நடந்தது. பதவி மோகம் கொண்டவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். சபரிமலை மற்றும் மதவாத அமைப்புகள் கேள்வி: சபரிமலை விவகாரத்தில் அரசு தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்குகிறதா? பினராயி விஜயன்: நாங்கள் எப்போதுமே ஆச்சாரங்கள் குறித்துப் பண்டிதர்கள் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதிகளுடன் ஆலோசிக்க வேண்டும் என்றுதான் கூறி வருகிறோம். 2006-லேயே இதைச் சொன்னோம். பெண்களின் உரிமைகள் குறித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவிற்காகக் காத்திருக்கிறோம்.

அவசரகதியில் கருத்துச் சொல்லத் தேவையில்லை.  கேள்வி: ஜமா அத்தே இஸ்லாமி குறித்து உங்களது கடுமையான விமர்சனங்களுக்குக் காரணம் என்ன? பினராயி விஜயன்: அவர்கள் மதவாதக் கொள்கை கொண்டவர்கள். கேரளத்தில் சிறுபான்மை மக்கள் இடதுசாரிகளை ஆதரிப்பதைத் தடுப்பதற்காக அவர்கள் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். சிஏஏ (CAA) விவகாரத்தில் எல்டிஎப் அரசுக்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரங்களைச் செய்ததே அவர்கள்தான்.

அவர்கள் ‘மர்மரிங் கேம்பெய்ன்’ மூலம் மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். மதவாதத்தைச் சகித்துக் கொள்வது இடதுசாரி அரசியலில் கிடையாது.  கேள்வி: வெள்ளப்பள்ளி நடேசன் உங்கள் காரில் பயணித்தது சர்ச்சையானதே? அவர் சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசுகிறார் என்ற விமர்சனம் உள்ளதே? பினராயி விஜயன்: வயது முதிர்ந்த ஒருவர் காரில் ஏறியதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை. அவர் முஸ்லீம் லீக் கட்சியைத்தான் விமர்சிப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

அதைத் தாண்டி நான் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் யாருடனும் பயணிக்கலாம், ஆனால் எனது கொள்கை மாறாது. என் கார் கதவு எப்போதும் மக்களுக்காகத் திறந்தே இருக்கும். காவல்துறை மற்றும் ஆர்எஸ்எஸ் சந்திப்பு விவகாரம் கேள்வி: ஏ.டி.ஜி.பி எம்.ஆர். அஜித் குமார் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைச் சந்தித்தது குறித்து? சிபிஐ(எம்)-க்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் ஏதோ ரகசிய உடன்பாடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே? பினராயி விஜயன்: இது முழுக்க முழுக்க ஜமா அத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகள் உருவாக்கும் கற்பனைக் கதைகள். அரசு சார்பில் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் அவர் அனுப்பப்படவில்லை. ஒரு உயரதிகாரி தனிப்பட்ட முறையில் யாரைச் சந்திக்கிறார் என்பது அரசின் கொள்கை முடிவுகளைப் பாதிக்காது.

கடந்த பத்து ஆண்டுகளில் கேரளம் வகுப்புவாதக் கலவரங்கள் அற்ற மாநிலமாக இருப்பதற்குப் போலீசாரின் பாரபட்சமற்ற நடவடிக்கைகளே காரணம். வெற்றியை உறுதி செய்வோம்! கேள்வி: வி.எஸ். அச்சுதானந்தன் இல்லாத முதல் சட்டமன்றத் தேர்தல் இது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? பினராயி விஜயன்: வி.எஸ், சீத்தாராம் யெச்சூரி, கொடியேரி பாலகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் இல்லாதது பெரிய இழப்புதான். அவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தூண்கள். ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது தனிநபர்களைத் தாண்டியது.

கூட்டுச் செயல்பாட்டின் மூலம் அந்த இடைவெளியை நிரப்பி வெற்றியை உறுதி செய்வோம்.  கேள்வி: தேர்தலில் தோல்வியுற்றால் அரசியல் வனவாசம் செல்வேன் என்று வி.டி.சதீசன் கூறியுள்ளார். அவருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன? பினராயி விஜயன்: தேர்தல் முடியட்டும், அதன் பிறகு நான் அவருக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன். இப்போது சொன்னால் அதன் மதிப்பு போய்விடும். நிச்சயம் ஒரு உபதேசம் உண்டு.  கேள்வி: மிக்க நன்றி தோழர். பினராயி விஜயன்: நன்றி.