tamilnadu

img

நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள சோசலிச கியூபாவுக்கு ஆதரவாக நிற்போம்! - பேரா. விஜய் பிரசாத்

நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள சோசலிச கியூபாவுக்கு ஆதரவாக நிற்போம்!

கியூப நாட்டின் தந்தை ஜோஸ் மார்ட்டியின் பெயர் தாங்கிய ஹவானா விமான நிலையத்திலிருந்து நான் கிளம்பிய அந்த காலைப் பொழுது மறக்க முடியாதது. அங்கிருந்த ஒவ்வொருவரையும் நான் கட்டிப்பிடித்து விடைபெற்றேன். முந்தைய நாள் எனது நண்பர்களிடமிருந்து விடைபெறுகையில் கண்களில் நீர் முட்டியது. அந்த அணைப்புகள் வெறும் விடைபெறல் மட்டுமல்ல; டொனால்டு டிரம்ப்பின் மதியீனமான போக்கால் கியூபாவிற்கும், கியூப புரட்சிக்கும் என்ன நேருமோ என்ற எனது ஆழ்மனப் பதற்றத்தின் வெளிப்பாடு அது.

உலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?

இன்று ஒட்டுமொத்த உலகமும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அட்டூழியங்களை வேடிக்கை பார்க்கும் சாட்சிகளாக மாற்றப்பட்டுவிட்டன. பாலஸ்தீன மக்களின் இனப்படுகொலை, வெனிசுலா ஜனாதிபதி கடத்தப்பட்டது, எவ்வித காரணமுமின்றி ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் என ஏகாதிபத்தியத்தின் கொடூரம் எல்லை மீறிக்கொண்டிருக்கிறது. டிரம்ப்பின் பிடிவாதத்தால் கூர்மையடைந்துள்ள அமெரிக்காவின் இந்த காட்டுமிராண்டித்தனம் கணிக்க முடியாததாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது. டிரம்ப் இப்போது ஈரானில் சிக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு போர் நிறுத்தத்திற்கு ஈரான் சம்மதிக்கும், அதன் மூலம் ஒரு வாரத்தில் மீண்டும் ஆயுதங்களைத் திரட்டி ஈரானிய  நகரங்களை இன்னும் கொடூரமாக அழிக்கலாம் என்ற டிரம்ப்பின் திட்டத்தை ஈரானியர்களின் அரசியல் ஞானம் முறியடித்துவிட்டது. உக்ரைன் போரையோ அல்லது பாலஸ்தீன இனப்படுகொலையையோ அவரால் நிறுத்த முடியவில்லை. டிரம்ப்பின் கூட்டாளியான இஸ்ரேலோ இப்போது லெபனான் வரை போரை விரிவுபடுத்தியுள்ளது. அடுத்ததாக, ஒரு எளிதான வெற்றியைப் பெறலாம் என்ற எண்ணத்தில் அவர் கியூபாவைத் தாக்குவாரா?

எண்ணெய் முற்றுகையும் ஸ்தம்பித்த வாழ்க்கையும்

டிரம்ப்பின் கொடூரமான ‘எண்ணெய் முற்றுகை’ கியூபாவில் தற்போது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை விவரிக்க வார்த்தைகள் போதாது. 2025 டிசம்பர் தொடக்கத்திலிருந்து கியூபாவிற்கு ஒரு சொட்டு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கூட வரவில்லை. இதன் விளைவாக நவீன வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமும் சிதைந்து போயுள்ளது. ஹவானாவின் சாலைகள் எரிபொருள் இன்மையால் மவுனமாகிவிட்டன. புரட்சிகர கியூபாவின் கோவில்களாக கருதப்படும் பள்ளிகளும் மருத்துவமனைகளும் அடிப்படை சேவைகளை வழங்கவே போராடுகின்றன. விவசாயிகளால் விளைபொருட்களை நகரங்களுக்குக் கொண்டு வர முடியவில்லை; மருந்துகள் கிடைப்பதே அரிதாகிவிட்டது. ஹவானாவில் நான் கேட்ட ஒரு சம்பவம் அதிர்ச்சியளிக்கக்கூடியது: நரம்பியல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய ஒரு நோயாளிக்கு, மின்சாரத் தடங்கல் மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். மூளைக்குள் ஒரு ஆய்வுக் கருவியைச் செலுத்துவது கூட இந்த மின்வெட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும். இந்த எண்ணெய் முற்றுகையின் மூலம் 1 கோடி கியூப மக்களைக் கற்காலத்திற்குத் தள்ள அமெரிக்கா துடிக்கிறது.

சர்வதேச ஒருமைப்பாடும் கியூபாவின் உறுதியும்

சர்வதேச மக்கள் பேரவையின் (International Peoples Assembly) ஒருமைப்பாட்டுக் குழுவின் ஒரு பகுதியாக நான் கியூபாவிற்குச் சென்றிருந்தேன். பிரேசிலின் நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தின் தலைவர் ஜோவோ பர்த்தி ஸ்டெடில் தலைமையில் சென்ற இந்தக் குழுவில், ஜாம்பியா சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் ஃப்ரெட் மெம்பே உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர். நாங்கள் கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவையும், ஜனாதிபதி மிகுயெல் தியாஸ்-கானல் அவர்களையும் சந்தித்தோம். கடந்த 30 ஆண்டுகளில் கியூபாவிற்கு நான் எத்தனையோ முறை வந்திருக்கிறேன். இந்த முறை நிலைமை மிகவும் கடினமாக இருப்பதை உணர முடிகிறது. ஆனால், கியூப மக்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள். 1959 புரட்சிக்கு முந்தைய அந்த அடிமைத்தனமான காலத்திற்கு (1958-க்கு) ஒருபோதும் திரும்ப மாட்டோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் எதிர்காலத்தை தற்காத்துக் கொள்ள இறுதி வரை போராடுவார்கள்.

புரட்சியின் சாதனைகளும் தற்போதைய சவாலும்

புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளில், மக்களின் உடனடித் தேவைகளைத் தீர்ப்பதே முக்கியமானது என்று பிடல் காஸ்ட்ரோ தெளிவுபடுத்தினார். பசி, வறுமை, எழுத்தறிவின்மை மற்றும் நோய்களை ஒழிப்பதற்கே கியூபப் புரட்சி முன்னுரிமை அளித்தது. ஆனால், சுமார் 70 ஆண்டுகளாகத் தொடரும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளும், தற்போது தீவிரமடைந்துள்ள எண்ணெய் முற்றுகையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தைச் சிதைத்து வருவது இதயத்தை நொறுக்குகிறது. கியூப ஜனாதிபதி மிகுயெல் தியாஸ்-கானல் மிகவும் எளிமையான மனிதர். “நாங்கள் எதிர்த்து நிற்போம்; ஆனால் புரட்சியின் மூலம் ஈட்டிய சாதனைகளையும், மக்களின் நல்வாழ்வையும் வீணடிக்க அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் உறுதியுடன் கூறினார். எவ்வளவோ தடைகள் இருந்தாலும், ஒவ்வொரு கியூபரும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது. அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மை

எனது நண்பரும் முன்னாள் கலாச்சார அமைச்சருமான ஏபெல் பிரிட்டோவுடன் பேசிக் கொண்டிருந்தது எனக்கு ஒரு மருந்தாக அமைந்தது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் சிந்தனையாளரான அவர், டிரம்ப்பின் தற்போதைய போக்கினை “தறிகெட்டு அலையும் அயோக்கியத்தனம்” என்று வர்ணித்தார். கடந்த ஜனவரி 3-ஆம் தேதி வெனிசுலாவில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட கியூப வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த கொட்டும் மழையிலும் மக்கள் திரண்டதை அவர் நினைவுகூர்ந்தார். பாலஸ்தீனர்கள், வெனிசுலா மக்கள், ஈரானியர்கள் மற்றும் கியூபர்களுக்கு எது நல்லது என்பது தங்களுக்கு மட்டுமே தெரியும் என்ற அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மை ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகும். “ஜனநாயகம்” என்ற பெயரில் இந்த  நாடுகளின் மக்களின் இறையாண்மையை அமெரிக்க ஜனாதிபதி உறிஞ்சிக் கொள்கிறார். இது ஒரு அருவருப்பான பார்வை. ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் கொல்லப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள். பாலஸ்தீனத்தின் குழந்தைகள் ஒருபோதும் பெரியவர்களாகவே மாறப்போவதில்லை.

ஒரு நம்பிக்கையின் கீற்று

தற்போதைய எனது கியூபப் பயணத்தின் கடைசி நாளில், சீருடை அணிந்த பள்ளிக் குழந்தைகள் ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்களின் கழுத்தில் புரட்சிகரக் கவசங்கள் மின்னின. அந்தச் சிறுவர் சிறுமிகளின் சிரிப்பும் பேச்சும் காற்றில் எதிரொலித்தன. இரண்டு ஆசிரியர்களின் மேற்பார்வையில் அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கு ஒரு மெய்நிகர் அணைப்பை நான் அனுப்பினேன். குழந்தைகளே, எப்போதும் பாதுகாப்பாக இருங்கள். கியூபாவை ஒவ்வொரு நாளும் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள்.  தமிழில் : எஸ்.பி.ஆர்.