tamilnadu

img

2026-ஐ நம்பிக்கையுடன் வரவேற்போம்! புதிய வளர்ச்சி கோட்பாட்டை நோக்கி ஒரு பயணம்

2026-ஐ நம்பிக்கையுடன் வரவேற்போம்!  புதிய வளர்ச்சி கோட்பாட்டை நோக்கி ஒரு பயணம்

நாம் போர்கள், ஆழமான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சுற்றுச்  சூழல் சீர்குலைவுகளுக்கு மத்தியில் புதிய தொரு ஆண்டிற்குள் (2026) நுழைந்திருக்கிறோம். இந்தச் சூழலில், நாம் கவலையுடன் நுழை கிறோமா அல்லது நம்பிக்கையுடனா? நான் நம்பிக்கையுடனேயே இருக்கிறேன். ஏனெனில் எனது பயணங்களில் உலகம் முழுவதுமுள்ள மக்கள்  தற்போதைய அவல நிலையைக் கண்டு ஏமாற்ற மடைந்துள்ளதைக் காண்கிறேன்; அவர்கள் பசியும்  துயரமும் இல்லாத ஒரு சமூகத்தில் வாழ விரும்பு கிறார்கள். ஆனால், வெறும் அதிருப்தி மட்டுமே இந்த உலகை மாற்றிவிடாது. அந்த அதிருப்தியை ஒரு ஆக்கபூர்வமான அரசியல் சக்தியாகவும், சாத்தியக்கூறுகளின் அரசியலாகவும் மாற்றுவதே நமது இன்றைய உடனடித் தேவையாகும். ஐநா அறிக்கையும் உலகப் பொருளாதாரத்தின் கசப்பான உண்மைகளும் 1964-ல் தொடங்கப்பட்ட ‘வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டு அமைப்பு’ (UNCTAD), கடந்த ஆண்டு இறுதியில் தனது 2025-ஆம் ஆண்டிற்கான வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் உள்ள முக்கியமான அம்சங்களை நாம் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும்: 1. தேக்கமடையும் உலகப்பொருளாதாரம் 2024-ல் 2.9 சதவீதமாக இருந்த உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி, 2025-ல் 2.6 சதவீதமாகக் குறையும் என்று ‘உங்க்டாட்’ UNCTAD கணித்துள்ளது. இது ஒரு நீண்டகாலத் தேக்கநிலையின் அறிகுறியாகும். ஆசிய நாடுகளின் தலைமையில் தெற்குலக நாடுகள் (Global South) 4.3 சதவீத வளர்ச்சியை எட்டி, உலக வளர்ச்சியில் 70 சதவீதப் பங்களிப்பை வழங்கினாலும், அவை இன்னும் வடபுலத்து நிதி மையங்களுக்கு (Global  North) அடிமைப்பட்டே கிடக்கின்றன. உழைப்பு  தெற்கில் நடக்கிறது; ஆனால் அதன் மதிப்பு  வடக்கிலுள்ள நிதி அமைப்புகளால் தீர்மானிக்கப் பட்டு சுரண்டப்படுகிறது. லத்தீன் அமெரிக்கா மற்றும்  கரீபியன் பகுதிகளில் வளர்ச்சி வேகம் குறைந்துள்ள நிலையில், ஆப்பிரிக்காவில் வளர்ச்சி சீரற்றதாக உள்ளது. 2. டாலர் மேலாதிக்கமும்  நிதிச் சந்தையும் உலக வர்த்தகத்தில் 90 சதவீதம் வங்கி மற்றும் நிதி  அமைப்புகளையே சார்ந்துள்ளது. சர்வதேசப் பணப் பரிமாற்ற அமைப்பான ‘ஸ்விஃப்ட்’ (SWIFT)-இல்  அமெரிக்க டாலரின் பங்கு இன்னும் 50 சதவீத மாகவே உள்ளது. உலகப் பங்குச் சந்தை மதிப்பில் பாதிக்கும் மேலானது அமெரிக்காவையே சார்ந்துள் ளது. சுருக்கமாகச் சொன்னால், உலக வர்த்தகம் வடபுலத்தின் கொள்கலன்களில் சுற்றுகிறது; வடபுலத் தின் கடன்களால் காப்பீடு செய்யப்படுகிறது. 40  சதவீத பத்திர வெளியீடுகள் டாலரிலேயே நடப்ப தால், தெற்குலகின் மீதான டாலர் ஏகாதிபத்தியம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 3. அதி-ஏகாதிபத்தியமும் (Hyper Imperialism) நிச்சயமற்ற தன்மையும் டொனால்டு டிரம்ப்பின் வர்த்தகப் போர் மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் உலக அமைப்பில் ஒரு நிரந்தரமான நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளன. இது முதலீடுகளைக் குறைத்து, குறிப்பாக வட அட்லாண்டிக் நாடுகள் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் தெற்குலக நாடு களில் பொருளாதாரத் தேக்கத்தை ஏற்படுத்தும். வரி விதிப்புப் போர்களும், புவி-பொருளாதார மோதல் களும் தற்காலிகமானவை அல்ல, அவை உலக அமைப்பின் நிரந்தரக் கூறுகளாக மாறிவிட்டன. 4. தீவிரமடையும் கடன் நெருக்கடி உலகின் குறைந்த வருமானம் கொண்ட 68 நாடுகளில் 35 நாடுகள் கடும் கடன் நெருக்கடியில் உள்ளன. வளர்ந்த நாடுகள் 1 முதல் 4 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கும்போது, பின்தங்கிய நாடுகள் 7 முதல் 11 சதவீத வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இது  அந்தந்த நாடுகளின் பொருளாதாரத் திறனைப் பொறுத்தது அல்ல, மாறாக சர்வதேச நிதி அமைப்பின் கட்டமைப்பிலேயே உள்ள பாரபட்சமாகும். கடன் என்பது இன்று தெற்குலக நாடுகளை, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ளது. 5. காலநிலை மாற்றமும் ‘கடன் அடிமைத்தனமும்’ காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள், அந்தப் பாதிப்பிற்காக அதிக வட்டி  செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படு கின்றன. 2006-ல் 5 பில்லியன் டாலராக இருந்த இத்தகைய கூடுதல் வட்டிச் செலவு, 2023-ல் 212 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கார்பன் வெளி யேற்றத்திற்கு மிகக் குறைந்த காரணமான நாடுகள்,  வடபுலத்து கடன் வழங்குநர்களுக்கு ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் கூடுதல் வட்டியாக வழங்கு கின்றன. இது ஒரு நவீன ‘காலநிலை-கடன் அடிமைத் தனம்’ (Climate-debt peonage) ஆகும். 6. ஊக வணிகப் பொருளாக  மாறும் உணவு உணவுப் பொருட்கள் இன்று நேரடிப் பொருள் வர்த்தகத்தை விட, நிதிச் சந்தையில் ‘ஊக வணிக’ பொருளாக மாற்றப்பட்டுள்ளன. பெரும் உணவு வர்த்தக நிறுவனங்கள் தங்களது வருமானத்தில் முக்கால்வாசிப் பகுதியை நிதித் தரகு மூலமே ஈட்டு கின்றன. இது தெற்குலகின் உணவுப் பாது காப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தீர்வு: புதிய வளர்ச்சி கோட்பாடு  (New Development Theory) தற்போதைய அமைப்பு தானாகவே சரியாகி விடும் என்று நினைப்பது வெறும் பகற்கனவு. நமக்குத் தேவை வெற்று முழக்கங்கள் அல்ல; ஒரு உறுதி யான பொருளாதாரத் திட்டம். மார்க்சிய ஆய்வு நிறு வனமான ‘டிரைகாண்டினென்டல்’ ஆய்வு நிறுவனம் உருவாக்கியுள்ள ‘புதிய வளர்ச்சி கோட்பாடு’, தெற்குலக நாடுகள் தற்சார்பு அடைய பத்து முக்கியமான கொள்கைகளை முன்வைக்கிறது: ஜனநாயகத் திட்டமிடல்: சந்தை சக்திகள் தீர்மானிப்பதற்குப் பதிலாக, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை முன்னுரிமைகளைத் தீர்மானிக்க உண்மையான அதிகாரம் கொண்ட ஒரு தேசியத் திட்டமிடல் ஆணையத்தை உருவாக்குதல் அவசியம். இது மக்களின் தேவையை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். அரசு தலைமையிலான தொழில்துறைக் கொள்கை:  டிஜிட்டல் உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்து தல், இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற முக்கியத் துறைகளை அரசு அடையாளம் காண வேண்டும். அவற்றை மானியங்கள், பொதுக் கொள்முதல் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் அரசு நேரடியாக ஆதரிக்க வேண்டும். மூலதனக் கட்டுப்பாடு மற்றும் வரி விதிப்பு: மூலதனம் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும். பங்குச் சந்தை ஊகங்களை ஒடுக்கி, உள்நாட்டு உற்பத்தித் துறைகளில் லாபத்தை  மீண்டும் முதலீடு செய்யக் கோருதல் வேண்டும்.  மேலும், சொத்து குவிப்புக்கு எதிராக முற்போக்கான வரி விதிப்பு முறையைக் கொண்டு வர வேண்டும். பொது வளர்ச்சி நிதி: தனியார் வங்கிகளைச் சார்ந்து நிற்காமல், நீண்டகாலத் தொழில் மற்றும் விவசாயத் திட்டங்களுக்கு மலிவான வட்டி விகிதத்தில் கடன் வழங்க அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை  வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்த வேண்டும். பொதுத்துறை உரிமை: எரிசக்தி, கனிம வளங்கள், போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் நிதி போன்ற நாட்டின் முதுகெலும்பாக உள்ள  முதன்மை அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறை களைத் தேசியமயமாக்கி, பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். உணவு இறையாண்மை: நிலச் சீர்திருத்தம் மூலம் நிலப்பிரபுத்துவம் மற்றும் கார்ப்பரேட் விவசாய  முறைகளை எதிர்த்தல் வேண்டும். கூட்டுறவு அமைப்புகள் மூலம் உற்பத்தியைப் பெருக்குவ தோடு, நீர்ப்பாசனம் மற்றும் சேமிப்புக் கிடங்கு களில் அரசு முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் உணவு இறக்குமதி மற்றும் உலகச் சந்தை விலை யேற்றத்தைச் சமாளிக்க முடியும். தொழில்நுட்ப இறையாண்மை: மேற்கத்திய நாடுகளின் அறிவுசார் சொத்துரிமை (IP) பிடியி லிருந்து விடுபட வேண்டும். பொது ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய தெற்கு-தெற்கு தொழில்நுட்பப் பகிர்வு மூலம் மருந்து மற்றும் எரிசக்தித் துறையில் சொந்தமாகத் தொழில்நுட்பங் களை உருவாக்குதல் வேண்டும். மண்டல ஒருங்கிணைப்பு: தெற்குலக நாடுகளுக்கு இடையே டாலர் அல்லாத நேரடி வர்த்தகம் மற்றும் உள்ளூர் நாணயப் பரிமாற்ற முறைகளை உருவாக்க வேண்டும். இது மேற்கத்திய நாடுகளின் நிதி  மிரட்டல்களில் இருந்து பாதுகாப்பை வழங்கும். கடன் இறையாண்மை: பொதுத் தணிக்கை மூலம் அநியாயமான வெளிநாட்டுக் கடன்களை அடையாளம் காணுதல் வேண்டும். மக்களின் நலனைப் பாதிக்காத வகையில், தேவைப்பட்டால் கடன் திருப்பிச் செலுத்துவதை நிறுத்திவைத்து, கடன் வழங்குநர்களுடன் கூட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அனைவருக்குமான பொதுப் பொருட்கள்: கல்வி,  மருத்துவம், போக்குவரத்து மற்றும் வீட்டுவசதியை வணிகமாக்காமல், அரசாங்கமே நேரடியாக வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும். இதை உள்நாட்டு உற்பத்தி அமைப்புகளுடன் (அரசு மருந்து நிறு வனங்கள், அரசு கட்டுமான நிறுவனங்கள்) இணைப்ப தன் மூலம் வேலைவாய்ப்பையும் பெருக்கலாம். ஒரு புதிய விடியலை நோக்கி இந்த பத்து அம்சத் திட்டம் ஒரு தொடக்கமே.  நமது பணி என்பது இப்போது வெறும் ஏமாற்றங் களைச் சேகரிப்பதல்ல, மாறாக அந்த ஏமாற்றங்களை ஒரு எதிர்காலத் திட்டமாக மாற்றுவதே ஆகும். கால னித்துவ ஆதிக்கத்திலிருந்து நாடுகள் விடுதலை பெற்றபோது, அவை தற்சார்பு மற்றும் முன்னேற்றம் குறித்த எழுச்சிப் பாடல்களைப் பாடின. 1960-ல் எகிப்திய கவிஞர் அப்தெல் ஹலீம் ஹபீஸ், அஸ்வான் அணை கட்டப்பட்டதைப் பற்றிப் பாடினார்:     “நாங்கள் அதைக் கட்டுவோம் என்று     சொன்னோம்,     அப்படியே அந்தப் பிரம்மாண்ட அணையைத் கட்டினோம்...     எங்களது சொந்தப் பணத்திலும்,     உழைப்பாளர்களின் கைகளாலும்,     சொன்னதைச் செய்தோம், மீண்டும் அதைச்     செய்வோம்!” இந்த வரிகளே நமது இன்றைய உந்துதல். அதிருப்தியை ஒரு திட்டமாக மாற்றுவோம். ஏகாதி பத்தியத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, உழைக்கும் மக்களின் கைகளால் ஒரு புதிய உலகைக் கட்டமைப்போம். தோழர் குவாமே நக்ருமா அடிக்கடி கூறுவது போல: “எப்போதும் முன்னோக்கி, எப்போதும் பின்வாங்காதே!”  தமிழில் சுருக்கம்:  எஸ்.பி.ஆர்.