போராட்டத்தில் துணை நிற்போம்!
சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் ஆதரவு
“இந்தியாவில் வாழும் 32 கோடி இஸ்லாமிய மக்களின் வாழ்வுரிமையை பறித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. அதை எதிர்த்து உரிமைகளை காக்க முற் பட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.” அவரது போராட்டத்திற்கு துணை நிற்போம் என்று சட்டமன்ற கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய பாஜக மக்களவையில் நிறை வேற்றியுள்ளது. இதனைக் கண்டித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், கண்டனத் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதனை ஆதரித்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, அசன் மவுலானா, கோ.க.மணி,கே.மாரிமுத்து, சதன் திருமலைக்குமார், வேல்முருகன், ஈ. ஆர். ஈஸ்வரன், அப்துல் சமது, சிந்தனைச்செல்வன் ஆகியோர் பேசினர். அவர்கள் பேசுகையில்,“இந்தியாவில் மத நல்லிணக்கம் நிலவுவது, ஒன்றிய பாஜக அரசுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துகிறது. அதிலும் குறிப்பாக, இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு கொஞ்சம்கூட மதிப்பளிக்க வில்லை. இஸ்லாமியர்களும் இந்திய விடுதலைக்கு பாடுபட்டவர்கள், இந்த மண்ணின் மைந்தர்கள். ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிக்க முயல்கிறது. இதன் மூலம் நமது நாட்டுக்கு மாபெரும் இழுக்கை தேடித்தருகிறது பாஜக அரசு. இந்தியா என்பது பல வண்ண மலர்களை கொண்டு கதம்ப மலர் தோட்டம். இதை சீரழிக்க மைனாரிட்டி பாஜக அரசு முயற்சித்து வருகிறது. அதற்காக அதன் கூட்டணி மற்றும் ஆதரவு கொடுத்து வரும் கட்சிகளை மிரட்டியும் வற்புறுத்தியும் வருகிறது. இது ரொம்ப நாளைக்கு நீடிக்காது. காரணம், அதை தமிழ்நாடு ஒரு போதும் ஏற்காது என்பதில் முத லமைச்சர் உறுதியாக இருக்கிறார். இஸ்லாமியர்களுடைய கண்ணீரை முதலமைச்சர் மொழிபெயர்த்திருக்கிறார். மேலும் பாஜகவின் பாசிச வெளிப்பாடு தான் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றம். ஆனால், இதுபோன்ற பாசிச நடவடிக்கைகளில் இருந்து தமிழ்நாடு வேறுபட்டு இருக்கிறது. மேலும், வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வாக சட்டப்பேரவையில் கண்டனம் எழுப்பியிருக்கும் முத லமைச்சருக்கு முழுமையான ஆதரவு கொடுப்போம். அவர் மேற்கொள்ளும் சட்டப்போராட்டங்களுக்கும் துணை நிற்போம் என்றும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தனர்.
இறுதி வெற்றி நமக்குத்தான்: நாகை மாலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி பேசும்போது,“மதச் சுதந்திரத்திற்கு எதிரான, மத நல்லிணக்கத்திற்கு எதிராக சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த சட்டத்தை அவர்கள் (பாஜக) நிறைவேற்றியிருக்கலாம். எதிர்ப்பு வாக்கு என்பது சாதாரண வாக்கு அல்ல. இதன் மூலம் மதச்சார்பற்ற சக்திகள் வெற்றி பெற்றிருக்கிறோம். உண்மையிலேயே மோடியின் பாஜக அரசாங்கம்தான் தோல்வியடைந்திருக்கிறது. தற்காலிகமாக பாஜக அரசு வெற்றி பெற்றிருக்கலாம். இறுதி வெற்றி என்பது இந்தியாவின் மதச்சார்பற்ற சக்தி களுக்குத்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறேன். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முதலமைச்சரின் உணர்வோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றுபடுகிறது. உங்களுக்கு (முதல்வருக்கு) துணை நிற்கும்”என்று தெரிவித்தார்.