பட்டியல் சாதியினர் முன்னேற்றத்தில் கேரள அரசின் தலையீடுகள்
கேரளாவில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் விரிவான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட பல நலன்புரி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை இடது ஜனநாயக முன்னணி அரசு செயல்படுத்தி வருகிறது. கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம், இந்த மக்களின் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான மாற்றம் எட்டப்பட்டுள்ளது. நீண்ட காலமாக எதிர்மறையான பொருள்பட பயன்படுத்தப்பட்ட “காலனி” என்ற வார்த்தையை அரசாங்கம் அனைத்து பதிவுகளிலிருந்தும் நீக்கி, அவர்கள் வாழும் இடங்களுக்கு உன்னதி/நகர் போன்ற பெயர்களை வழங்கியது, அவர்களுக்கு இப்போது முன் தொடக்கக் கல்வி முதல் முனைவர் பட்டம் வரை படிக்கவும், பைலட் பயிற்சி பெறவும் அரசாங்க ஆதரவு உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகளால், பட்டியல் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சுயமரியாதை மற்றும் கண்ணியத்து டன் கூடிய அறிவொளி பெற்ற சமூகமாக மாறியுள்ளனர். ஒரு காலத்தில் அறிவும் எழுத்தறிவும் மறுக்கப்பட்டவர்களின் 842 சந்ததியினர் இப்போது உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர். ஒரு சமூகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான அடித்தளம், கல்வித் திட்டங்களை விரிவாக சீர்திருத்துவதன் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சி.ஏ., சி.எஸ்., ஐசிடபிள்யூஏ போன்ற படிப்புகளுக்கும், ஐஐடி, ஐஐஎம் போன்ற தன்னாட்சி நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் மாநிலத்திற்கு வெளியே படிப்பவர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது. தற்போது 14 லட்சம் மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நிலம் மற்றும் வீடுகள் உறுதி செய்யப்பட்டன. 9 ஆண்டுகளில் 33,058 பட்டியல் சாதியினருக்கு வீடுகள் கட்டுவதற்காக 1653 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதேபோல், நிலமற்றோர் வீட்டு மறுவாழ்வுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 55-இல் இருந்து 70 ஆகவும், வருமான வரம்பு ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. கிராமப்புறங்களுக்கான அடிப்படை மேம்பாட்டுத் திட்டமான அம்பேத்கர் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. அவற்றுக்கு மாவட்ட அளவில் நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை துரிதமாக நிறைவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் படிப்பறை திட்டம் நாட்டிற்கே ஒரு முன்மாதிரியான மற்றொரு திட்டம் ‘படிப்பறை’ என்பதாகும். முன்பு 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த படிப்பறைத் திட்டம், 2022 ஆம் ஆண்டிலிருந்து 5 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், கேந்திரிய வித்யாலயாக்களில் உள்ள மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2018 முதல் 2025 வரை, தலா 2 லட்சம் ரூபாய் 40236 படிப்பறைகளுக்கு ஒதுக்கப்பட்டது. பட்டியல் பழங்குடியினர் பகுதிகளில் 364 சமூக அறிவியல் அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.