அரசியல் சட்டத்திற்கு புறம்பாக இந்தியைத் திணிப்பதா
தெற்கு ரயில்வேக்கு கே. பாலகிருஷ்ணன் கண்டனம்
சென்னை, ஆக. 26 - தெற்கு ரயில்வே இந்தித் திணிப்பு நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது சமூகவலை தளப் பக்கத்தில் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “தெற்கு ரயில்வே அதிகாரிகள் இந்தி யை பயன்படுத்தினால், பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என ‘அலுவல் மொழி’ இணை இயக்குநர் அறிவித்துள்ளார். தென்னக ரயில்வே இயங்கும் மாநிலங்களில் இந்தியே கிடையாது. அட்ட வணை 8-இல் தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் ஆகியவை தேசிய மொழிகளாக இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடரலாம் என சட்டமே சொல்கிறது. எனவே, இயற்கை நீதிக்கும், சட்டத்திற்கும் புறம்பாக இங்கு இந்தியில் கடிதம் எழுதினால், கோப்புகளை இந்தியில் பராமரித்தால் பதவி உயர்வில், சலுகைகளில் முன்னுரிமை என்பது அப்பட்டமான இந்தி திணிப்பு நடவடிக்கையே ஆகும். இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தெற்கு ரயில்வே செயல்படும் அனைத்து மாநிலங்களின் மொழிக்கும் முக்கியத்துவம் வழங்குவதுடன், அதிகாரிகளை அந்தந்த மொழிகளைக் கற்கவும் பயன்படுத்தவும் ஊக்குவித்து, அவ்வாறு செயல்படுவோருக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.” இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.