மதுரை:
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பகோரிய வழக்கில் தமிழக மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் நலத்துறைசெயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை பசும்பொன் நகரைச் சேர்ந்தவெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில், காது கேளாதோர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அரசு உதவி பெறும்பள்ளிகள் 76 உள்ளது. இதில் அரசுப்பள்ளிகள் 22. இதில் கண் பார்வையற்றோருக்கான 10 சிறப்பு பள்ளிகள், காது கேளாதவர்களுக்கான 10 சிறப்பு பள்ளிகள் உள்ளன. இதில் ஐந்து மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.இந்தப் பள்ளிகளில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்களுக்கு மதியஉணவிற்கென, அரசு ரூ.450 முதல் 650வரை வழங்கி வருகிறது.இதில் பூந்தமல்லி, தஞ்சாவூர் பள்ளிகளில் பயின்று வரும் 10-ஆம் வகுப்புமாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல திருச்சிராப்பள்ளியில் உள்ள சிறப்பு பள்ளியில்பயிலும் 12- ஆம் வகுப்பு மாணவர்களும்100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.ஆனால் அரசால் நடத்தப்பட்டு வரும்பள்ளி களில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள், மற்றும் மேல்நிலை ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள், இசை ஆசிரியர், வாட்ச்மேன், துப்புரவுப் பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், சிறப்புப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவேமாற்றுத்திறனாளிகள் நலத்துறைகாலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.இந்த மனு செவ்வாயன்று நீதிபதிகள், சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அறிவுசார் குறைபாடு குழந்தைகள்
மதுரையை சேர்ந்த ராஜா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “ தமிழகத்தில் அறிவுசார் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் தங்குவதற்காக இல்லம் உள்ளது. இதில் குழந்தைகளுக்காக பேச்சுத்திறன், மனநல ஆலோசனை, விளையாட்டுப் போட்டிகள் என பல்வகை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த இல்லம் தமிழகத்தில் மிக குறைவான இடங்களில் மட்டுமே உள்ளது.தமிழக அரசு டாஸ்மாக் மற்றும் தமிழ்நாடு கேபிள் நடத்துகிறது. ஆனால் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென் தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் அறிவுசார் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இல்லம் அமைத்து அவர்களுக்குபயிற்சி வழங்க உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு செவ்வாயன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 9- ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.