100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனே விடுவித்திடுக!
தஞ்சாவூரில் உ.வாசுகி பேட்டி
தஞ்சாவூரில் உ.வாசுகி பேட்டி தஞ்சாவூர், மே 12- தஞ்சை மாவட்டம் உட்பட தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 2 முதல் 4 மாதங்கள் வரை சம்பள பாக்கி நிலுவையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். தஞ்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “தஞ்சாவூர் விவசாயம் சார்ந்த மாவட்டம்” நீர்நிலைகளில் தூர்வாரும் பணி ஓரளவு நடந்து முடிந்திருந்தாலும் இன்னும் முழுமையாக முடியவில்லை. எனவே தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோல் பழுதடைந்திருக்கும் மதகுகளை உடனே பழுது பார்க்க வேண்டும்” என்றார். “செங்கிப்பட்டி உய்யக்கொண்டான் கட்டளை கால்வாய்க்கு உட்பட்ட 150 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதில் கூடுதல் கவனம் செலுத்தி தூர்வார வேண்டும். இதன் மூலம் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல வேண்டும் என்பதே நோக்கம்” என்று அவர் குறிப்பிட்டார். பயிர்க் கடன் குறித்து பேசிய அவர், “பயிர்க் கடன் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பயிர் கடன் அளிக்க வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கு பயிர்க் கடன் கொடுப்பதில் உள்ள சிக்கல்களை ஒழுங்குபடுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
100 நாள் வேலை திட்டம் - பிரச்சனைகளும் தீர்வுகளும்
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு 2 முதல் 4 மாதங்கள் வரை சராசரியாக சம்பள பாக்கி உள்ளது. அதை உடனடியாக கொடுக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும் என கேட்டு வருகின்றோம். இந்த நிலையில் இருக்கின்ற சம்பளத்தையும் குறைப்பது நியாயம் அல்ல” என்று அவர் கண்டித்தார். “தஞ்சாவூரில் 100 நாள் வேலை கொடுப்பது நின்று போன நிலை உள்ளது. எனவே வேலையை கூடுதலாக வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு பரிந்துரையில் 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். அதி கரித்து வரும் விலைவாசியோடு இணைக்கப் பட்டதாக சம்பளம் இருக்க வேண்டும். சமூக தணிக்கை முறையாக இருக்க வேண்டும் போன்ற சில பரிந்துரைகளை கொடுத்திருக் கிறார்கள். அதையெல்லாம் அமல்படுத்தி னால்தான் தமிழகம் உட்பட மற்ற மாநி லங்களில் 100 நாள் வேலை பாதுகாக்கப் படும்” என்றார்.
வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு
விவசாய கூலி தொழிலாளர்கள் நிலை குறித்து அவர் கூறுகையில், “விவசாய கூலி தொழிலுக்கு நிறைய வட மாநில தொழி லாளர்கள், குறிப்பாக மேற்கு வங்க தொழி லாளர்கள் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங் களுக்கு வருகின்றனர். அவர்களுக்கு இடைத்தரகர்கள் குறைவான கூலியை கொடுக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைப்பதில்லை. எனவே வெளிமாநிலத்திலிருந்து வரக்கூடிய விவசாய கூலி தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஊதியம் ஆகியவற்றை முறைப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள்
“தற்போது கோடைக் காலம் என்பதால் குடிநீருக்கான உத்தரவாதத்தை தஞ்சை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். சமீபத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீப்பிடித்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்வதுடன் கூடுத லாக உள் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம்
ஜூன் மாதம் 11 முதல் 20 வரை தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். “மாநில அரசின் உரிமைகளை பறிப்பது, நிதி கொடுக்க மறுப்பது, எதேச்சதிகார நடவடிக்கை, ஜனநாயக தொழிற்சங்க உரிமைகளைப் மறுப்பது, விலைவாசி உயர்வு, வேலை யின்மை போன்ற ஒன்றிய அரசின் தவறான கொள்கையை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரம் செய்யவுள்ளது” என்றார்.
காவல்துறை நடவடிக்கை மீது விமர்சனம்
“தமிழக காவல்துறையின் அணுகுமுறை மிக மோசமாக உள்ளது. நியாயமான, ஜன நாயக நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுப்பது, சென்னை போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான இடங்களை சுருக்கிக் கொண்டே வருவது, மக்கள் நடமாட்டம் இல்லாத குறுகலான இடங்களில் நடத்த அனுமதி வழங்குவது, மாற்றுத் திறனாளிகள் போராட கிளம்பிய இடங்களிலேயே கைது செய்தது, அவர்களை வீட்டு காவலில் வைப்பது போன்ற மிக மோசமான அணுகு முறை இருந்தது” என்று அவர் கண்டித்தார். “எனவே காவல்துறை நடவடிக்கையில் முதலமைச்சரின் கூடுதல் கவனம் தேவைப் படுகிறது. பல நேரங்களில் கைது செய்கின்ற னர். ஸ்டேஷனில் வைத்து விசாரித்து சிறைக்குப் போகும்போது எலும்பு முறிவுடன் செல்கிறார்கள். அது எப்படி நடக்கும்? கைதி களாக இருந்தாலும் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். எனவே ஒட்டுமொத்தமாக காவல்துறை அணுகுமுறை மாற்றப்பட வேண்டியுள்ளது” என்றார்.
தேர்தல் சீர்திருத்தங்கள்
தேர்தல் ஆணையத்துடனான சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், “தேர்தல் ஆணையம் அகில இந்திய அளவில் எல்லா கட்சிகளையும் அழைத்து உரையாடல் நடத்தினார்கள். மார்க்சிஸ்ட் கட்சித் தரப்பில் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உள்பட 3 பேர் கொண்ட குழு எழுத்துப்பூர்வமான மனுவை தேர்தல் ஆணையரிடம் கொடுத்துள்ளது” என்றார்.
பஹல்காம் பிரச்சனை
பெஹல்காம் பிரச்சனை குறித்து கூறுகை யில், “மோதல் நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் மீறல்கள் நடக்கிறது. ஒட்டுமொத்தமாக அமைதி திரும்ப வேண்டும் என்பதை பிரதானமான கோரிக்கையாக வைக்கின்றோம். அதே சமயம் குற்றம் செய்த தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் தேடிப்பிடித்து, கைது செய்து, சட்டத்தின் அடிப்படையில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். “பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம், ஆதரவு, நிதி கொடுக்கிறது என்பது சர்வதேச அளவில் நிறுவப்பட்ட விஷயம். எனவே பாகிஸ்தான் இதை செய்யக்கூடாது என்றால் ராஜீய ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். “மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு எப்ஏடிஎப் சர்வதேச அமைப்பின் நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானுக்கு நான்கு ஆண்டுகளுக்கு நிதி கிடைக்கவில்லை. எனவே இந்த முறையும் தீவிரவாதிகளுடன் பாகிஸ் தானுக்கு இருக்கக்கூடிய தொடர்புகளை நாம் ஆவணப்படுத்தி இந்த அமைப்பிடம் வழங்க வேண்டும்” என்றார்.
‘சிந்தூர்’ என்பது சரியல்ல “’
ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயர் வைத்ததன் மூலமாக ஒரு ஆணாதிக்கப் பார்வை வெளிப்பட்டுள்ளது. கணவனை பறி கொடுத்தவர்கள், குங்குமத்தை இழந்த வர்கள் என்ற அடையாளத்தை முன்னிலைப் படுத்துவது என்பதில் ஆணாதிக்க மனோ பாவம் உள்ளது” என்று அவர் விமர்சித்தார். “அடுத்து வரக்கூடிய பீகார் தேர்தலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பாஜகவின் ஒட்டு மொத்த நடவடிக்கையாக காட்டப்பட்டு, வாக்கு கள் வாங்குவதற்கான குறுகிய தேர்தல் ஆதா யத்துக்கு பயன்படுத்தக்கூடாது” என்றார்.
சகாயம் அறிக்கை
“கனிம வளக் கொள்ளை தொடர்பான சகாயம் ரிப்போர்ட் 2015-ல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை அரசு முறையாக வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளங்கள் குறித்து கேள்வி கேட்போரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை உள்ளது” என்று அவர் கவலை தெரிவித்தார்.
தாது மணல் கொள்ளை
“தாது மணல் கொள்ளை சம்பந்தமாக நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 9 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருந்தும் ஊழல், முறைகேடு, சட்ட விரோத நடவடிக்கைகள் நடந்துள்ளது. இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. சிபிஐ 7 நிறுவனங்களின் மீது எஃப்ஐஆர் போட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவு வாங்கி உள்ளனர்” என்றார். “ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால், சமீபத்தில் தமிழக சுரங்கத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் குவாரி லைசென்ஸ் 10 வருடத்தில் இருந்து 15 முதல் 30 வருடம் வரை அதிகரித்து அரசாணை வந்துள்ளது. எல்லாவிதமான அக்கிரமங்களை யும் செய்ய இது வழிவகை செய்யும். எனவே இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தி னார்.
மதுபான விற்பனை கட்டுப்பாடு
“மதுபான உற்பத்திக்கு ஒரு உச்சவரம்பு விதிக்க வேண்டும். விநியோகத்திற்கு ஒரு உச்சவரம்பு இருக்க வேண்டும். கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். முன்பு கூறியது போலவே கல்வி நிறு வனங்கள், மக்கள் நடமாட்டங்கள் இருக்கக்கூடிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது” என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பு
“சமூக பொருளாதார பின்புலத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும். ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிவித்துள் ளது; ஆனால் கணக்கெடுப்பு எப்பொழுது தொடங்கும் என சொல்லவில்லை. எனவே இதற்கு ஒரு காலவரையறை அறிவிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். பேட்டியின் போது கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், ஆர்.மனோகரன், எஸ்.தமிழ்ச்செல்வி, ஆர்.கலைச்செல்வி, கே.அருளரசன், கே.அபி மன்னன் ஆகியோர் உடன் இருந்தனர்.