மதுரை:
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டங்கள் தோறும் உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேனி எம்.பி., ஓ.பி.ரவீந்தரநாத் என கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது குறித்து தனது கவனத்துக்கு வரவில்லை என்று மழுப்பினார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பருவ மழை சரியாக பெய்யாததாலேயே கடுமையான வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னரே இது குறித்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை கழகத்தில் அரசின் தலையீடு இருப்பதாக துணை வேந்தர் சூரப்பா வைத்துள்ள குற்றச்சாட்டு தவறானது. தேர்தல் சமயத்தில் மதஉணர்வுகளை தூண்டும் வகையில்பேசுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் என கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது குறித்து தனது கவனத்துக்கு வரவில்லை என்று முதலமைச்சர் பதிலளித்தார்.