மதுரை:
ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாகப் புகார் வருவதையடுத்து பொது விநியோகத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தமிழகஅரசு தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் குமார். இவர்மீது கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு குமார் சென்னை உயர் நீதிமன்றமதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், ரேசன் கடைகளில் விற்கப்படும் அரிசி, மனிதர்கள்சாப்பிடுவதற்கு உகந்ததாக இருப்பதில்லை. இதனால் அந்த அரிசியை குடும்ப அட்டைதாரர்கள் வெளியே விற்கின்றனர் என்றார்.அரசுத் தரப்பில், மனுதாரர் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி கேரளாவுக்குக் கடத்திச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தமிழகஅரசு விளக்க வேண்டும். மனுதாரருக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியின் தன்மை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் விசாரணையை ஆக.25 தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.