புகழ் பெறலாம்!
பெற்றவர் சொல்லைப் பெரிதும் கேட்கப் பெருமைகள் யாவும் பெற்றிடலாம்! மற்றவர் தம்மை மதித்து நடக்க மண்ணிலே நிலையாய் வாழ்ந்திடலாம்! தனக்கென வாழா தந்தை தாயைத் தாங்கியே காக்க உயர்ந்திடலாம்! மனதினில் நல்ல எண்ணம் கொண்டால் மலரென மணமும் வீசிடலாம்! கற்றவர் சொல்லைக் கனிவாய் ஏற்க கவலை இன்றிக் களிப்புறலாம் ! பற்றினை வைத்துப் பண்பாய்ப் பழகப் பாரினில் என்றும் சிறந்திடலாம்! சிந்தனை செய்து செயலைச் செய்தால் சிறகினை விரித்துப் பறந்திடலாம்! நந்தமிழ் மொழியில் நாளும் படிக்க நன்மைகள் பெற்று வளர்ந்திடலாம்! முயற்சி செய்து முனைப்பாய் உழைக்க முகட்டினை நாமும் தொட்டிலாம்! உயர்ந்த எண்ணம் உனக்குள் இருந்தால் உலகில் அழியாப் புகழ்பெறலாம்!