இன்று பொது வேலைநிறுத்தம்; தமிழகம் முழுவதும் மறியல்!
சென்னை, ஜூலை 8 - தொழிற்சங்க உரிமை, தொழி லாளர் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நான்கு தொழி லாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறக்கோரி மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் இன்று (ஜூலை 9) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஒன்றிய - மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள், போக்குவரத்து, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை ஊழி யர்கள், சுமைப்பணி, ஆட்டோ, கட்டு மானம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். மேலும், இந்திய தொழிலாளர் வர்க்கம் நடத்தும் இந்த மாபெரும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக- விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், மாதர்கள், வாலிபர்கள் மற்றும் மாணவர் சங்கங்கள் புதனன்று ஒன்றிய அரசு அலுவலகங்களையும், ரயில்களையும் மறித்து போராட்டம் நடத்துகின்றன. இந்த வேலைநிறுத்தத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்திருப்பதுடன், மாவட்டங்களில் நடைபெறும் மறியல் போராட்டங்களிலும் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.