tamilnadu

img

பட்டா நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு

கிருஷ்ணகிரி, அக்.10- பட்டா நிலங்களில் கெயில் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராட்டம் நடத்திய விவசாயிகள் கைதுசெய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் அனுமதி இல்லாமல் கெயில் நிறுவனம் பட்டா நிலங்களில் குழாய் பதிக்கும் பணியில் ஈடு பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டம் முழுவதும் ஓராண்டாக பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு ஓசூர் சாராட்சியர் அலுவலகம் முன்பு கெயில் நிறுவனத்தை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது விவசாயிகள் அனுமதி பெறாமல் பட்டா நிலங்களில் கெயில் குழாய் பதிக்கப்படாது என அரசு அதிகாரிகள் கூறினர். ஆனால் தடாலடியாக திங்களன்று (அக்.7) காலையில் இப்பகுதி பட்டா நிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிக்க ஜேசிபி மூலம் குழி தோண்டினர். தகவல் அறிந்து வந்த விவசாயி கள் சங்க தலைவர்கள் பட்டா நிலத்தில் குழாய் பதிப்பதை தடுத்தனர். தடுக்கக்கூடாது என்று  கெயில் நிறுவன அதிகாரிகளும், வருவாய்துறையினரும் மிரட்டல் விடுத்தனர். அங்கு வரவழைக்கப்பட்ட காவல் துறையினர் நில உரிமை யாளர்கள் பட்டேல், சந்திரசேகர் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வட்டத் தலைவர் தேவராஜ், விவசாய தொழிலாளர் சங்க வட்டச் செயலாளர் ஆனந்தகுமார்,வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன் மத்திகிரி கிளை தலைவர் ரவி ஆகியோரை கைது செய்து மத்திகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து மாவட்டச் செயலாளர் சி. பிரகாஷ் கூறுகையில், சிறு குறு விவசாயத்தை பாதிப்புக் குள்ளாக்கும் கெயில் நிறுவனம் அவற்றுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள், காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம்.  நில உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் பட்டா நிலங்களில் கெயில் குழாய் பதிப்பதை அனு மதிக்க முடியாது என்று கூறிய அவர், விவசாயிகள் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக மாவட்டம் முழுதும் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.