tamilnadu

சட்டமன்றத்திலிருந்து.... 12,110 ஊராட்சிகளில் நூலகம்

சட்டமன்றத்திலிருந்து....

 12,110 ஊராட்சிகளில் நூலகம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின், சோழிங்கநல்லூர் திமுக உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,“ஊரக பகுதிகளில் நூலகம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த பணியை அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள 12,110 ஊராட்சிகளில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதியில் இரண்டு ஊராட்சிகளிலும் நூலகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.  

ரூ.1400 கோடியில் மேம்பாலம்

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதியில் உள்ள நசரத்பேட்டை- திருமழிசை நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட அரசு ஆவன செய்யுமா என்று கேள்வி பூந்தமல்லி தொகுதி திமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.“சாத்தியக்கூறு ஆராய்ந்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு சேவை சாலையுடன் கூடிய 6 வழி சாலை விரிவாக்க செய்ய ரூ.495 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது என்றும் மதுரவாயல் முதல் திருப்பெரும்புதூர் வரை சென்னை வெளிவட்ட சாலை 8 கிலோ மீட்டர் நீளத்தில் உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்க ரூ.1400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது”என்றார்.

 99.60 சதவீத ரேஷன் கடையில் கைரேகை பதிவு

நியாய விலை கடையில் கைரேகை மூலம் பொருட்கள் பெறப்படுவதால் காலதாமதம் ஏற்படுவதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என திருப்பத்தூர் தொகுதி திமுக உறுப்பினர் நல்லதம்பி துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு துறை அமைச்சர் அர.சக்கரபாணி, “நியாய விலை கடையில் கைரேகை பதிவு ஒன்றிய அரசின் வலியுறுத்தலில் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் 60 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 99.60 சதவீத நியாய விலை கடையில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கைரேகை பதிவில் பிரச்சனை ஏற்பட்டால் கண் கருவிழி மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது”என்றார்.

பரவை பேரூராட்சியில் தடுப்பணை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் துணைக் கேள்வி எழுப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,“பரவை பேரூராட்சி சமயநல்லூர் குடிநீர் பிரச்னையை தீர்க்க கடந்த அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதை தற்போது கட்டித் தர வேண்டும்”என்றார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், “உங்களுக்குத் தடுப்பணை தானே வேண்டும், கட்டித் தரப்படும்” என்றார்.