த.கண்மணி
காரைக்குடி. இந்த பெயரை கேட்டவுடனே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது செட்டிநாடு சமையல், கல்விக் கொடை வள்ளல் அழகப்பர், ஆதிகாலத்து அரண்மனை போன்ற வீடுகள். இந்த அரண்மனை போன்ற வீடுகள் பல்வேறு சிறப்புகளை உடையவை. அவை பல பிரபலமான திரைப்படங்களின் படப்பிடிப்புத் தளமாகவும் அமைந் துள்ளன. கோடை விடுமுறைகளில் மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலமாகவும் அமைந்துள்ளன. பெரும் பாலான மக்கள் அதன் வெளிப்புறத்தை மட்டுமே பார்த்திருக்க இயலும், ஆனால் உள்ளே சென்று பார்த்தால்தான் நம்மால் உணர முடியும் அங்கு கொட்டிக் கிடக்கும் தமிழரின் கலை நயத்தை. அவ்வாறான கலை நயம் கொண்ட வீடுகளின் தரைபகுதிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. காரைக்குடி செட்டிநாடு வீடுகளுக்கு சென்ற அனைவருக்கும் ஒரு கேள்வி மனதில் எழுந்திருக்கும். “இந்த அற்புத தரைக்கற்கள் எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும்? காரைக்குடிக்கு மிக அருகில் அமைந்துள்ளது ஆத்தங்குடி என்கிற ஒரு கிராமம். இந்த கிராமத்தில் தான் இவ்வாறன அழகிய பாரம்பரியம் மிக்க தரைக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன. நூறாண்டு பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக எந்த ஒரு இயந்திரத்தின் உதவியும் இன்றி கைத்தொழிலாகவே நடைபெற்று வருகிறது. இந்த டைல்ஸ் தயாரிக்கும் தொழிலில் நாற்பது ஆலைகள் குடிசைத்தொழிலாக ஆத்தங்குடியில் இன்றளவும் இயங்கி வருகின்றன. முதலில் டைல்ஸ் தயாரிக்கத் தேவைப்படும் மணல் அதே ஊரின் ஓடைகளில் இருந்தே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. அந்த மணலை சிமெண்ட் உடன் சேர்த்து கலவை தயாரிக்கின்றனர். அடுத்தபடியாக கண்ணாடியில் அச்சுக்களை வைத்து பல வண்ண பெயிண்ட்டுகளை ஊற்றுவர். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்றவாறு வண்ணங்களில் தரைக்கற்களைக் கொண்டுவர குறிப்பிட்ட சில காலம் தேவைப்படும் என்று கூறுகின்றனர் டைல்ஸ் தயாரிப்பாளர்கள். பின்னர் அதன்மீது சிமெண்ட் கலவையை போட்டு நன்றாக மூடி வெயிலில் காய வைக்கின்றனர். அதன் பிறகு மூன்று நாட்கள் தண்ணீர் நிரப்பிய தொட்டியில் ஊற வைக்கின்றனர். பின்னர் மீண்டும் வெயிலில் காயவைத்து, இறுதியில் கண்ணாடியை பிரித்து எடுத்து பார்ப்போரை ஈர்க்கும் அழகிய வண்ண வண்ண டைல்ஸ் கற்களை அடுக்குகின்றனர். பல பெரிய பிராண்ட் டைல்ஸ்கள் சந்தையில் வந்து குவிந்தாலும் ஆத்தங்குடி டைல்ஸ்க்கு என்று ஒரு தனி மதிப்பும், தனி முக்கியத்துவமும் இருக்கத்தான் செய்கிறது. அதனால் அது உலகப் பிரசித்தி பெற்றுள் ளது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆத்தங்குடி தரைக்கற்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த வெளி நாட்டவர் பல நாட்கள் காத்திருந்து பெறுகின்றனர். நமது நாட்டில் பெங்களுரு, கேரளா, புதுச்சேரி, கோவா, ஐதராபாத், மும்பை, தில்லி போன்ற நகரங் களுக்கும் ஆத்தங்குடி தரைகற்கள் அனுப்பிவைக்கப் படுகின்றன. கைத்தொழிலாகவே தயாரிக்கப்படும் இந்த தரைக்கற்கள் எத்தனை வருடம் கடந்தாலும், காலநிலை மாறினாலும் அதே பொலிவுடன் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும் தன்மை கொண்டவை, இதனை வீட்டில் பதிப்பதன் மூலம் கோடைகாலத்தில் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். மூட்டு வலி, வாத நோய் வராமல் தடுக்கும் என கூறப்படுகிறது. இதை சராசரி நடுத்தர குடும்பத்தினரும் வாங்கி பயன் படுத்தும் விதமாகவே இதன் விலை அமைந்துள்ளது. டைல்ஸ்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக் கேற்றவாறு தயாரிப்பது மட்டுமின்றி அதனை அவர்கள் எந்த ஊராக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று ஒட்டியும் தந்துவிடுகின்றனர். சந்தையில் பல டைல்ஸ்கள் வந்தாலும் இந்த ஆத்தங்குடி தரைக்கற்களின் நன்மையை உணர்ந்த மக்கள் வேறு டைல்ஸ்களை தேடி செல்வதில்லை. இது அந்த கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகுக்கிறது. இத்தொழிலை தலைமுறை தலை முறையாய் செய்து வருவதால் இப்பொழுது படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் இதனை எடுத்து நடத்த முன்வந்துள்ளனர்.