மதுரை:
கொரானோ வைரஸ் தாக்கத்தால் பூ ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மல்லிகை பூ வை சென்ட் தொழிற்சாலைக்கும், வெளிநாட்டிற்கும் அனுப்ப மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் சிறப்பு அனுமதி அளித்துள்ளார். இதனால் 1,500 விவசாயிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் மல்லிகை பூ சாகுபடியில் 1,500க்கும் அதிகமான விவசாயிகள் சுமார் நான்கு ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்து வருகின்றனர்.மக்கள் தேவைக்கு தவிர்த்து, மல்லிகை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். விலை வீழ்ச்சியடையும்போது சென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும்.கொரோனாவால் கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் மல்லிகை பூக்களை செடிகளிலிருந்து பறிக்கவில்லை. இதனால் செடியிலேயே பூக்கள் கருகிவிட்டன. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.இந்த நிலையில் மல்லிகை பூவை தொழிற்சாலைகள், வெளிநாட்டிற்கு அனுப்ப மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளார். இதனால் மல்லிகை பூ ஏற்றுமதி தொடங்கிவிட்டது.
இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன் தீக்கருக்கு அளித்த பேட்டி: -
மல்லிகை பூ சாகுபடி மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளது. கொரோனாவால் மல்லிகைப்பூ விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே வாடி உதிர்ந்து விட்டது. இதனால் டன் கணக்கில் பூக்கள் வீணாகின. இந்தப் பிரச்சனையை மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் கவனத்திற்கு கொண்டு சென்றதைத் தொடர்ந்து ஆட்சியர் சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.
மதுரையிலிருந்து மல்லிகை பூ கோயம்புத்தூரில் உள்ள சென்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல ஆட்சியர் உடனே அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து பூக்கள் கொள்முதல் தொடங்கியுள்ளது. செவ்வாயய்க்கிழமை 1,500 கிலோ செல்கிறது. வேறு சில ஆலைகளுக்கு 3 ஆயிரம் கிலோ அனுப்பப்படுகிறது.சென்னை - துபாய் இடையே சரக்கு விமானம் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 1,300 கிலோ மல்லிகை பூவை ஏற்றுமதி செய்ய தோட்டக்கலைத்துறை இயக்குநர் மூலம் ஆட்சியர் அனுமதி பெற்றுத் தந்துள்ளார்.புதன்கிழமை முதல் துபாய்க்கு மல்லிகை ஏற்றுமதியாகிறது. இதனால் 1,500 விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது என்றார்.
-நமது நிருபர்