பிப்.12 - வேலை நிறுத்தம் : திமுக ஆதரவு
சென்னை, பிப். 10 - ஒன்றிய பாஜக அரசின் விவசாயிகள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து, பிப்ரவரி 12 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில், பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறி வித்துள்ளன. விவசாயிகள் சங்கங்களின் கூட்ட மைப்பான சம்யுக்த கிஷான் மோர்ச்சாவும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கிறது. தமிழ்நாட்டில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ஆளும் திமுக-வும் தனது ஆதரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து, திமுக தலைமைக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தன்னிச்சையாக நிறைவேற்றிய நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வலி யுறுத்தியும்; மின்சார சட்டத்தை திருத்துவதன் மூலம் உற்பத்தி, பகிர்மானம் போன்றவை தனி யார் மயமாக்கப்படும் அபாயம் உள்ளதைச் சுட்டிக்காட்டியும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கு வோம் என்ற உத்தரவாதத்தை இதுவரை ஒன்றிய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்தும், விதைகள் சட்டத்தை திருத்தம் செய்து, சிறு- குறு விவசாயிகள் கைவசம் உள்ள விதை உரிமையைப் பறிப்பதையும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றியதுடன், ஒன்றிய அரசின் பொறுப்பை தட்டிக் கழித்து மாநிலங்களின் மீது நிதிச் சுமையை ஏற்றியிருப்பதை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “தொழிற்சங்கங்களின் இந்த நியாய மான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப் பட வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகம் இந்த போராட்டத் திற்கு தனது ஆதரவை தெரிவிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.