தரங்கம்பாடி அருகே இறால் குட்டை அமைப்பதை எதிர்த்து உண்ணாவிரதம்
மயிலாடுதுறை, ஏப்.25-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள ராஜீவ்புரம் பகுதியில் இறால் பண்ணை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட ராஜீவ்புரம் நண்டலாறு அருகே, தாட்கோவுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் தாட்கோ மூலம், இங்கு இறால் பண்ணை அமைப்பதற்கான முன்னெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில், ஏற்கெனவே பல இறால் குட்டைகள் செயல்பட்டு வருவதால் நிலத்தடி நீர் உவர் நீராக மாறி, குடிநீர் மற்றும் விளைநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், கால் நடைகள் உப்பு நீரை அருந்தி நோய் ஏற்படுவதாகவும், இயற்கை வளங்கள் அழிந்து வருவதாலும், இறால் பண்ணை அமைக்க தொடர்ந்து அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனினும், இறால் பண்ணை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ராஜீவ்புரம், பொறையாறு மரகதம் காலனி உள்ளிட்ட கிராமங்களைச் சுற்றி இருக்கக் கூடிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராஜீவ்புரம் அருகே, தாட்கோ நிலத்திற்கு எதிரே அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்கனவே இயங்கி வரும் இறால் பண்ணையால் குடிநீர், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக இறால் பண்ணை அமைக்கக் கூடாது, வீடற்ற ஏழை மக்களுக்கு தாட்கோ நிலத்தில் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர் உண்ணாவிரதப் போராட்டம் என மக்கள் அறிவித்திருந்த நிலையில், தகவல் அறிந்து வந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் சதீஷ்குமார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கிராம மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்ட பின், முடிவு செய்யப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.