அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகள் விளக்கம்
தஞ்சாவூர், மே 10- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரம், துவரங்குறிச்சி கிராமத்தில், புஷ்கரம் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக அசோலா வளர்ப்பு தொட்டியை பார்வையிட்டனர். அதன் பயன்பாடுகள் மற்றும் வளர்ப்பு முறைகள் குறித்து விவசாயிகள் விளக்கினர். கால்நடைத் தீவனத்தில் சேர்க்கப்படும் மக்காச்சோளம், கம்பு, சோளம் போன்ற தானிய வகைகள், பிண்ணாக்கு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால் கால்நடை மற்றும் கோழித் தீவனச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகவே, புரதச்சத்து மிகுந்த அசோலாவை கால்நடை மற்றும் கோழிகளுக்கு நிரந்தர மாற்றுத் தீவனமாகப் பயன்படுத்தி, உற்பத்திச் செலவினை கணிசமாகக் குறைக்கலாம். இது, நெற்பயிருக்கு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அசோலாவில் 25-30% புரதச்சத்து, 14-15% நார்ச்சத்து, 3-4% கொழுப்புச்சத்து, 45-50% மாவுச்சத்து, தாது உப்புகள் மற்றும் பல நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளது. அசோலா உற்பத்தி முறை: 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட சிமெண்ட் தொட்டியில் 25-30 கிலோ மண்ணைப் பரப்பி, அதனுடன் 5 கிலோ மக்கிய சாணத்தைக் கலந்து, அதனுடன் பாறைகளை உடைக்குமிடம் அல்லது ஆழ்குழாய்க் கிணறு போடுமிடம் ஆகியவற்றில் கிடைக்கும் மண் 100 கிராம் கலந்து கொள்ளவும். நீரின் அளவு 5 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் 5 கிலோ அசோலாவை இட்டால் இரண்டு வாரங்களில் சுமார் 35-40 கிலோ அசோலாவை சேகரித்து எடுக்கலாம். 10 நாளுக்கு ஒருமுறை சாணக்கரைசலை ஊற்ற வேண்டும். அசோலா ஓர் உயிர் உரம்: காற்றில் இருக்கும் தழைச் சத்தினைக் கிரகிக்கும் திறனுடையது. இதில் 4.5 சதவிகிதம் தழைச்சத்து உள்ளது. ஆகவே நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 200 கிலோ இடலாம். இதனால் பயிருக்கு தழைச்சத்து கிடைப்பதோடு 15-20% மகசூலும் உயர்கிறது. கால்நடைகளுக்கு தீவனமாக அளித்தல்: 1 கிலோ அசோலா உற்பத்தி செய்ய 75 பைசா மட்டும் தான் செலவாகிறது. அசோலாவை பயன்படுத்தும் போது, அடர் தீவனம் ஒரு பங்கு, அசோலா 1 பங்கு என்ற விகிதத்தில் கலந்து கொடுக்க வேண்டும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி சுமார் 15-20% அதிகரிப்பதுடன், கொழுப்புச்சத்தும், கொழுப்பு அல்லாத திடப்பொருளின் அளவும் அதிகரிப்பதால் பாலின் தரமும் மேம்படுகிறது. அசோலா உட்கொள்ளும் கோழிகளில் உடல் எடை அதிகமாவதுடன், முட்டையின் அளவும் அதிகரிக்கிறது. மேலும் முட்டையின் மஞ்சள் கரு அடர்ந்த நிறத்தில் காணப்படுகிறது. எனவே ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசோலா தயாரித்தல் வருமானம் தரக்கூடிய ஒன்று மட்டுமல்ல, சுற்றுச்சூழலையும் பாதுகாக்க உதவுகிறது.