tamilnadu

img

தேங்காய் விலை வீழ்ச்சி: அரசு நடவடிக்கை எடுக்க தென்னை விவசாயிகள் கோரிக்கை

தேங்காய் விலை வீழ்ச்சி: அரசு நடவடிக்கை எடுக்க  தென்னை விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர், ஜன.4-  தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய தென்னை சாகுபடி பகுதிகளான பேராவூரணி, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கடும் வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகி கவலையில் ஆழ்ந்துள்ளனர். தென்னை விவசாயிகள் மட்டுமல்லாது, உரம் இடுதல், தேங்காய் பறிப்பு, உரித்தல், கொப்பரை தயாரித்தல், தேங்காய் எண்ணெய் உற்பத்தி போன்ற பணிகளில் ஈடுபடும் விவசாயத் தொழிலாளர்களும் தென்னை பொருளா தாரத்தை மட்டுமே சார்ந்துள்ளனர். இந்நிலையில், சந்தை நிலவரம் தற்போது முற்றிலும் மாறி, தேங்காய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தேங்காய் ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.24 வரை மட்டுமே கிடைப்பதால், மர பராமரிப்பு செலவுக்கே கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி கூறுகையில், “தேங்காய் பறிப்பு, கூலி, உரம், நீர்ப்பாசனம், மர பராமரிப்பு என அனைத்தும் அதிக செலவு பிடிக்கிறது. ஆனால் தேங்காய்க்கு கிடைக்கும் விலை அதற்கே போதவில்லை.  இதே நிலை நீடித்தால் தென்னை விவசாயிகள் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும்.  மேலும், தென்னை விவசாயிகள் சார்பில் அரசிடம்,” தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கொப்பரைக் கொள்முதலை செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய்யை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். தேங்காய் சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருட்களுக்கு மானியம் மற்றும் தொழில் ஊக்கத் திட்டங்கள், தென்னை விவசாயிகள் நலவாரியம் மூலம் பாதுகாப்பு நிதி, காப்பீடு, கடன் சலுகை ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும்’’ என்றார்.  இந்நிலையில், தேங்கா ய் விலையை நிலைநிறுத்தி விவசாயிகளின் வாழ்வை பாதுகாக்க அரசும், வேளாண் துறையும் விரைந்து களமிறங்க வேண்டும் என்பதே தஞ்சை மாவட்ட தென்னை விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.