tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

வீட்டின் முன்பு மது குடித்ததை  கண்டித்த மூதாட்டி கொடூரக் கொலை

தூத்துக்குடி,ஜன.4- செய்துங்கநல்லூர் அருகே வீட்டின் முன் அமர்ந்து மது குடித்ததை கண்டித்த மூதாட்டியை வாலிபர் கொடூரமாக கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி முத்தம்மாள் (80). இவர் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டின் வாசலில் அமர்ந்து அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் அருண்பாண்டி (20) என்பவர் மதுபானம் குடித்தாராம். இதனால் முத்தம்மாள் அவரை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அருண்பாண்டி வீட்டு வாசலில் கிடந்த துடைப்ப கட்டையால் முத்தம்மாளை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்தக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்து  செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்கு பதிந்து, அருண்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பால் உற்பத்தியாளர்கள்  சங்க கிளைக் கூட்டம்

பெரம்பலூர், ஜன.4-  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் கிராமத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கிளைக் கூட்டம் நல்லுசாமி தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட துணைத் தலைவர்கள் சங்கர் மற்றும் அம்சவள்ளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலத் துணைத் தலைவர் ந. செல்லதுரை சிறப்புரையாற்றினார். பால் கொள்முதல் விலையை அதிகப் படுத்த வேண்டும். ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பால்வளத் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை குறித்து வலியுறுத்த வேண்டும். ஜன.8 ஆம்  தேதி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் போராட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில், கிளைத் தலைவராக நல்லசாமி, செயலாளராக அழகப்பன், பொருளாளராக முருகேசன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெற்றோர் - ஆசிரியர்  சந்திப்புக் கூட்டம் 

பாபநாசம், ஜன.4-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.  பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு பள்ளிச் செயலர் கலியமூர்த்தி தலைமை வகித்துப் பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் பேசினர். 10, 11, 12 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு ஷால் போர்த்தி, சான்றிதழ், பரிசு வழங்கப் பட்டது.  பரிசு பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் கெளரவிக்கப்பட்டனர். பள்ளி துணை முதல்வர் சித்ரா வரவேற்க, பள்ளி முதல்வர் தீபக் நன்றி கூறினார்.

பேராவூரணியில்  சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

தஞ்சாவூர், ஜன.4-  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” எனும் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, டி.என்.டி.ஜே. மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், வர்த்தக கழகத் தலைவர் அபிராமி சுப்பிரமணியன், அதிமுக ஒன்றியச் செயலாளர் கோவி. இளங்கோ உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சமூக மக்கள் பங்கேற்றனர்.  மாநிலச் செயலாளர் ஐ. அன்சாரி உரையாற்றினார். கிளைத் தலைவர் முஹம்மது கனி நன்றி கூறினார்.