சொந்த நிலம் - அடிப்படை உரிமை திருத்துறைப்பூண்டி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!
வீடு என்பது வெறும் நான்கு சுவர்கள் அல்ல; அது ஒரு மனிதரின் கௌரவம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார அடையாளம். ஆனால், திருத்துறைப்பூண்டி நகரில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இன்றுவரை வீட்டுமனைப் பட்டா என்பது எட்டாக்கனியாகவே இருப்பது வேதனைக்குரியது. ஆன்லைன் பட்டா குளறுபடிகள் தமிழகம் முழுவதும் நத்தம் நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்கும் பணி 1980-களில் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் திருத்துறைப்பூண்டியில் 1,112 பேருக்கு அனுபவப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், 2015-இல் நிலப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்ட போது, வருவாய்த்துறையின் மெத்தனத்தால் திருத்துறைப்பூண்டி நத்தம் நிலங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால், கையில் பட்டா இருந்தும் வாரிசுதாரர்கள் பெயர் மாற்றம் செய்யவோ, வங்கிக் கடன் பெறவோ முடியாமல் தவிக்கின்றனர். இந்த ‘ஆன்லைன்’ முட்டுக்கட்டைக்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கோவில் நிலக் குடியிருப்புகள் திருத்துறைப்பூண்டியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாகக் கோவில் நிலங்களில் வசித்து வருகின்றனர். வாடகைதாரர்களாகவே தொடரும் இவர்களுக்கு, அந்த நிலங்களை கிரயம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கையாகும். இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, பல தலைமுறைகளாக நிலமற்றவர்களாக இருக்கும் இந்த விளிம்புநிலை மக்களுக்குச் சொத்துரிமை வழங்க அரசு முன்வர வேண்டும். வகைமாற்றமும் பண்ணை நிலங்களும் நீர்நிலைகளின் கரைகளிலும், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களிலும் பல ஆண்டுகளாக வசிக்கும் ஏழை எளிய மக்களுக்குச் சிறப்பு அரசாணை மூலம் நில வகைமாற்றம் செய்து பட்டா வழங்கப்பட வேண்டும். அதேபோல், இன்றும் ‘பண்ணையார்’ மற்றும் ‘ஜமீன்தார்’ பெயர்களிலேயே நீடிக்கும் நிலங்களில் பல ஆண்டுகளாகக் குடியிருப்பவர்களுக்கு, நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் அந்த நிலங்களை கையகப்படுத்திப் பட்டா வழங்க வேண்டும். மின் இணைப்பும் ஆதார் அட்டையும் மட்டுமே ஒரு மனிதரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்துவிடாது; தான் வசிக்கும் மண்ணின் மீது அவனுக்குச் சட்டப்பூர்வமான உரிமை இருக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் மெத்தனமும் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டமும் நகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் இன்றும் வாடகை வீடுகளிலேயே வசிக்கின்றனர். இவர்களுக்குத் தலா 2 சென்ட் அளவில் வீட்டுமனை பட்டா வழங்க அரசிடம் போதிய நிலங்கள் உள்ளன. ஆனால், ‘அனைவருக்கும் வீடு’ எனக் கூறும் அரசு நிர்வாகம், களத்தில் தகுதியான பயனாளிகளைக் கண்டறியத் தவறிவிட்டது. மக்களின் இந்த நியாயமான மனக்குமுறலைத் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல, ஜனவரி 05 ( இன்று) வட்டாட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த எழுச்சிப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்று உரிமை முழக்கமிடுகிறார். 3,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் தயார் நிலையில் உள்ளன. இது வெறும் காகிதம் அல்ல; எம் மக்களின் வாழ்வுரிமைச் சாசனம். தனித்தனியாகக் குரல் கொடுத்தது போதும், இனி ஒரே குரலாக முழங்குவோம்!