மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று, கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய பணி நியமனத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உடனே நடவடிக்கை எடுத்த அணு ஆராய்ச்சி மைய இயக்குநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் பணி நியமனத் தேர்வு (Advertisement no IGCAR/02/2021) விண்ணப்பத்திற்கான கடைசி தேதியான ஜூன் 3 ஆம் தேதியை ஊரடங்கை கணக்கிற் கொண்டு கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென சில இளைஞர்களும், சிலரின் பெற்றோரும் தொடர்பு கொண்டு ஜூன் 3 அன்று மாலை கேட்டுக் கொண்டனர். கடைசி தேதி முடிவதால் தாமதிக்கக் கூடாது என அன்று இரவே 11 மணிக்கு கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய (IGCAR) இயக்குநருக்கு மெயில் அனுப்பி அதை ஜூன் 4 வெள்ளியன்று காலை ஊடகங்களுக்கும் பகிர்ந்திருந்தேன். இயக்குநர் அலுவலகத்தோடு நேரடியாகவும் எம்.பி. அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு வெள்ளிக்கிழமையன்று பேசப்பட்டது. தற்போது இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு எனது கடிதத்தில் கோரியவாறு ஜூன் 30 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். விண்ணப்பிக்க விரும்புவோர் இக்கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய (IGCAR) இயக்குநருக்கும் நன்றி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.