திமுக கூட்டணி வாக்குகள் 52 விழுக்காடாக அதிகரிக்கும்
கருத்துக் கணிப்பில் தகவல்!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, திமுக கூட்டணியின் வாக்குகள் 52 விழுக்காடாக அதிகரித்திருப்பதாக இந்தியா டுடே - சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த ஜன வரி 2 முதல் பிப்ரவரி 9 வரை அனைத்து மக்களவைத் தொகுதிகளில் ‘மூட் ஆப் தி நேஷன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை ‘இந்தியா டுடே’ வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி யின் வாக்குகள் 47 விழுக்காட்டில் இருந்து 52 விழுக்காடாக அதிகரிக்கும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு பூஜ்யம் அதிமுக கூட்டணியின் வாக்குகள் 23 விழுக்காட்டில் இருந்து 20 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்றும், பாஜக கூட்டணி யின் வாக்குகள் 20 சதவிகிதமாக இருக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழ் நாட்டில் பாஜக-வால் சீட் கணக்கைத் தொட ங்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி
முதல்வர் பதவிக்கு ஆள் கிடைக்கவில்லை
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 22 மாதங்களாக வன்முறையால் பற்றி எரிந்து வருகிறது. இந்த வன்முறைக்கு அம்மாநில முதலமைச்சர் பைரேன் சிங் தான் காரணம் என ஆடியோ வெளியானது. ஆடியோ விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றமும் விசாரணை மேற்கொண்டுவருகிறது. உச்சநீதிமன்ற விசாரணை மற்றும் சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட பயம் உள்ளிட்ட நெருக்கடிகளால் மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா, புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால பொறுப்பில் பணியாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் பைரேன் சிங் ராஜினாமா செய்து 4 நாட்கள் ஆன பின்பும் முதலமைச்சர் பொறுப்பில் அமர பாஜக எம்எல்ஏக்கள் யாரும் முன்வரவில்லை. முதலமைச்சர் பொறுப்பு வேண்டாம் என வேறு மாநிலத்திற்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர். இதனால் வேறு வழியின்றி மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக வியாழனன்று இரவு ஒன்றிய உள்துறை அமைச்சகம் முறைப்படி அறிவித்தது. அரசியலமைப்பின் 356ஆவது பிரிவின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்து உள்ளார்.