tamilnadu

img

ஆழ உழும் கேரளப் பாடப் புத்தகங்கள் - கணேஷ்

ஆழ உழும் கேரளப் பாடப் புத்தகங்கள் -  கணேஷ்

“சாஷா... சாப்பிடலாம் வா, ரெடியா இருக்கு..” - அப்பா. “சரிப்பா... அம்மா, நான் கொஞ்சம் ஸ்கூலுக்கு எடுத்துட்டுப் போகட்டா..?” “எடுத்துக்கோம்மா” - அம்மா. தோளில் போட்டிருந்த துண்டைத் துடைத்தவாறே வந்த அப்பா, மகளுக்கான காலைச் சிற்றுண்டியைத் தட்டில் போட்டுக் கொண்டு வருகிறார்.  சாஷா தயாராகிக் கொண்டிருக்கையில், வாசலில் இருந்து அவளை அழைக்கும் குரல் கேட்கிறது. நண்பனின் குரல். பொதுவாக, மாணவி என்றால், மற்றொரு மாணவிதான் வந்து அழைப்பாள். சேர்ந்து செல்வார்கள். இந்தக்காட்சியில் அதிலும் மாற்றம். இப்படியாக ஆசிரியர் அந்தக் காட்சியை விவரிக்கிறார். கேரளப் பாடப் புத்தகங்கள் நாட்டிலேயே முதன்முறையாக பாலியல் சமத்துவத்தை அழுத்தமாகப் பதிய வைக்கின்றன. மேலேயுள்ள உரையாடல் தொடர்பான படத்தில் மகளை அம்மா தலைசீவித் தயார் செய்து கொண்டிருக்கிறார். அப்பா, சமையலறையில் சிற்றுண்டி செய்யும் பணியில் உள்ளார். மற்றொரு படத்தில் அப்பா அமர்ந்து தேங்காய் துருவிக் கொண்டிருக்கிறார். அம்மா அடுப்பில் கவனமாக இருக்கிறார். மகளும், மகனும் பெற்றோர் இருவருக்கும் தேவையான உதவிகளைச் செய்கிறார்கள். இது மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.  தகரும் எந்திரத்தனம் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதைப் பாடப் புத்தகங்களில் அறிமுகப்படுத்துவதில் கேரள அரசு கவனம் செலுத்தியுள்ளது. சமையலறை என்றாலே, அம்மாவின் படத்தைப் போடுவது, கல்வியாளர் என்றால் உயர்சாதிக்காரர் படத்தைப் போடுவது என்பதுதான் நாடு முழுவதும் உள்ள வழக்கமாகும். வீடுகளின் படங்களில் அம்மா சமையலறையில் இருப்பார்கள். அப்பா செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருப்பார். எந்திரத்தனமாக நடைமுறையில் இருக்கும் இந்தப் போக்கை கேரள அரசின் பாடப்புத்தகங்கள் தகர்த்துள்ளன. இந்தப் படங்களைப் பார்த்த மாணவர்களின் புருவங்கள் விரிந்துள்ளன. இது குறித்த வகுப்பு உரையாடல்கள் சுவாரஸ்யமாக நகர்ந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். “இந்தப் படக்காட்சி உங்களில் யார் வீட்டிலாவது பார்க்க முடியுமா” என்றபோது ஓரிரண்டு கைகள் உயர்ந்திருக்கின்றன. ஒரு மாணவரோ, “இன்னிக்கு போய் சமையலறையப் பாத்துடனும்” என்கிறார். மற்றொரு மாணவி, “இப்படி இருந்தா வேகமா வேலைய முடிச்சுடலாம்” என்றிருக்கிறார். ஒரு மாணவரின் வினா பெரும் சிரிப்பலைகளைக் கிளப்பியிருக்கிறது. அவர் எழுப்பிய வினா, ஆசிரியரை நோக்கியது. “சார்... இந்த மாதிரி துண்டு போட்டுட்டு நீங்க உக்காருவீங்களா..?”. ஆசிரியர், “எங்கள் தலைமுறை ஆண்களின் செல்வாக்குக்கு உட்பட்டது. நான் இந்த மாதிரி சமையலறையில் இருந்ததில்லை” என்று உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார். மாணவர்கள் வீடு வரையில் இந்த உரையாடலை எடுத்துச் சென்றனர். நீங்க ஏம்ப்பா, செய்ய மாட்டேங்குறீங்க..? படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன பவித்ரா என்ற மூன்றாம் வகுப்பு மாணவி, அந்தப் படத்தைத் தனது அப்பாவிடம் காட்டி, “வீட்டில் நீங்கள் ஏன் இப்படிச் செய்வதில்லை” என்று கேட்டிருக்கிறார். ஆசிரியர்களும், வீட்டு வேலைகள் கூட்டுப் பொறுப்பு என்பதைப் படங்கள் மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி அடைந்துள்ளன என்கிறார்கள்.  ஆண்களை விட, பெண்கள் 16 விழுக்காடு அதிகமான வீட்டுவேலையைச் செய்கிறார்கள் என்று ஆய்வொன்று தெரிவிக்கிறது. குழந்தைகள் இருக்கும் வீடு என்றால், 91 விழுக்காடு பெண்கள் தங்கள் குழந்தைகளைக் கவனிப்பதில் கூடுதல் நேரம் செலவிட வேண்டியிருக்கிறது. ஆண்களில் 30 விழுக்காட்டினர் மட்டுமே குழந்தைகளைக் கவனிப்பதில் நேரத்தை செலவிடுகிறார்கள்.  இரண்டு பேரும் வேலை பார்க்கும் வீடுகளில் பல வீடுகளில் பெண்களின் நிலைமையோ பரிதாபம்தான். வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், சமத்துவம் உருவாகும் நிலையை எட்டிவிடவில்லை. இந்நிலையில்தான் கேரள கல்வித்துறை பாடத்திட்டத்திலேயே சமத்துவத்தைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தியிருக்கிறது. ஆங்கிலப் புத்தகத்தில் “Policeman” என்றிருந்ததை “Police Officer” என்று இரு பாலருக்கும் பொருந்துவதாக மாற்றியுள்ளனர்.  நடப்புக் கல்வியாண்டில் 1, 3, 5, 7, 9 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களில் பாலியல் சமத்துவத்தை வலியுறுத்தும் படங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பெரும் கவனத்தை பாடப்புத்தகங்களில் உள்ள இந்தப் படங்கள் ஈர்த்துள்ளன. சமூக வலைத்தளங்களில் பலத்த ஆதரவு கிட்டியுள்ளது. சமூகத்தின் மிக இளம் தலைமுறையிடம் மாற்றத்தைக் கொண்டு வரும் இந்த முயற்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.  எப்போதுமே பல துறைகளில் புதிய பாதைகளை அமைக்கும் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, இதில் ஆழமாக சமூக மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறது.