நாகர்கோவில், ஜூலை 10- கன்னியாகுமரி மாவட்டம் கணியாகுளம் ஊராட்சி யில் பார்வதிபுரம் வழியாக செல்லும் அனந்தனாறு கால்வாயில் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட படித்துறையை அந்த பகுதியில் உள்ள மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலை யில் கடந்த ஜூன் 12 ஆம் தேதியன்று இரவில் அப்பகுதி யில் உள்ள ஒரு தனிநபர் படித்துறையை ஆக்கிர மித்து சிமிண்ட் கலவையால் மூடி அடைத்துள்ளார். இதை எதிர்த்து அந்த பகுதி பொதுமக்கள் 14 ஆம் தேதியன்று படித்துறை இருந்த இடம் அருகில் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனில் குமார் மற்றும் காவல் துறையினர் அங்கிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது அவதூறாக பேசி, தாக்குதல் நடத்தினர்.
மேலும் பொதுமக்களுக்காக நியாயம் கேட்ட விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் மலைவிளை பாசியை உதவி ஆய்வாளர் அனில் குமார் ஒருமையில் பேசி, சட்டை காலரை பிடித்து இழுத்து அவமரியாதையாக நடந்து கொண்டார். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பலமுறை புகார் அளித்தும் பொதுமக்களிடமும், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசியிடமும் வரம்பு மீறி தவறாக நடந்து கொண்ட காவல் துறை உதவி ஆய்வாளர் அனில்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனில் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வடசேரி அண்ணாசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் கே.மோகன், நிர்வாகிகள் பெஞ்சமின், பிரேம் ஆனந்த், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.