tamilnadu

img

குடிதண்ணீருக்கு வார்டு வாரியாக மாநகராட்சி நிதியிலிருந்து சிறப்பு நிதி ஒதுக்க வேண்டுகோள் மாமன்ற கூட்டத்தில் சிபிஎம் உறுப்பினர் செல்வம் கோரிக்கை

குடிதண்ணீருக்கு வார்டு வாரியாக மாநகராட்சி  நிதியிலிருந்து சிறப்பு நிதி ஒதுக்க வேண்டுகோள் மாமன்ற கூட்டத்தில் சிபிஎம் உறுப்பினர் செல்வம் கோரிக்கை

கும்பகோணம் மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பட்டேல் நகர்மன்ற கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை வகித்தார். துணை மேயர் தமிழழகன், ஆணையர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாமன்ற கூட்டத்தில், கும்பகோணத்திற்கு புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க சட்டமன்றத்தில் ஒப்புதல் அளித்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தும் மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக, தனி தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி சம்பந்தமான அடிப்படை வசதிகளுக்காக 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின்போது, கும்பகோணத்தில் இருந்து புறப்படும் நவகிரக சிறப்பு பேருந்துகளுக்கு வெளியூரில் இருந்து வரும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். அந்த பயணிகளுக்கு அதிகாலை தங்கி தன்னை தயார்படுத்திக் கொண்டு புறப்படுவதற்கு ஏற்றவாறு பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்ய வேண்டும். மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை உடனடியாக சீர் செய்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர். 34 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் செல்வம் பேசுகையில், தொடர்ந்து நான் வலியுறுத்தி வரும் மன்ற கூட்ட நடவடிக்கைகளையும், மாமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் குறை நிறைகள் ஆகியவற்றை பதிவேடுகளில் பதிவு செய்தும் பராமரிக்க வேண்டும் என கூறி வருகிறேன். ஆனால் அது செயல்படுத்தப்படாமல் உள்ளது. ஆகவே, உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் திட்ட நிதி உதவி மட்டுமே நம்பி இருக்காமல், இதைத் தவிர பிரத்யோகமாக மாநகராட்சி நிதியிலிருந்து குடிதண்ணீருக்கான நிதி ஒதுக்கி பொதுமக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

 34 ஆவது வார்டில் குடிதண்ணீர் குழாய் அமைப்பதற்கு சாலையில் நடுவே தோண்டப்பட்ட நிலையில், அச்சாலையை மீண்டும் போடப்படாததால் மேடு பள்ளமாக உள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஓலைபட்டினம் வாய்க்கால் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், இன்னும் நிறைவேற்றப் படாமல் இருக்கிறது. அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். கும்பகோணம் காய்கறி மார்க்கெட் அருகிலே, இவ்வித அசம்பாவிதங்கள் தடுக்கும் நோக்கத்தோடு காவல்துறை கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு பயனற்று உள்ளது. அதை காவல்துறையினர் கண்காணிக்க மாநகராட்சி மூலம் பரிந்துரை செய்ய வேண்டும். தாராசுரம் சுடுகாடு பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாமல், சமூக விரோதச் செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆகவே, சுடுகாடு பகுதியில் சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும். தாராசுரம் காவேரி கரை ஒட்டி, ஈமக் கிரியை மண்டபம் கட்டித் தர வேண்டும். தெருவிளக்கு இல்லாத மின்கம்பங்களில் தெருவிளக்கு போடப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.