திருமெய்ஞானம் தியாகிகள் நினைவிடத்தில் சிபிஎம் தலைவர்கள் செவ்வணக்கம்!
மயிலாடுதுறை, ஜன. 19 - திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான் - நாகூரானின் 44-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடை யூர் அருகேயுள்ள நினைவிடத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 1982-ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று நடைப்பெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தின் போது, அப்போதைய எம்.ஜி.ஆர். அரசின் காவல்துறை நடத்திய கண்மூடித்தன மான துப்பாக்கி சூட்டில் திருமெய் ஞானம் கிராமத்தைச் சேர்ந்த தியாகிகள் அஞ்சான், நாகூரான் ஆகிய இரு வரும் வீரமரணமடைந்தனர். அவர் களின் நினைவை ஒவ்வொரு ஆண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடித்து வருகிறது. அதன்படி, திங்களன்று நடைபெற்ற 44-ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்கு கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகை வி.பி. மாலி, நாகை மாவட்டச் செயலாளர் வீ. மாரிமுத்து, விவசாய தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் கருப்பையா, தஞ்சா வூர் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு, மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ். துரைராஜ், ப.மாரியப்பன், டி. சிம்சன், ஜி. வெண்ணிலா, சி. விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ், டி.ஜி. ரவி, அமுல் காஸ்ட்ரோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தியாகி அஞ்சான் குடும்பத்தினரும் மலர்மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் மலர் தூவி வீர வணக்கம் மரியாதை செய்தனர்.
