சென்னை, ஜன.11- தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சனிக்கிழமையன்று (ஜன.11) சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், டி.ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் முதன்முறையாக மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்தோம். பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம். ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான ஆதரவையும், வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவோம் என்பதையும் தெரிவித்தோம் என்றார்
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 5 அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமாரை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஏற்கனவே 2011 முதல் 2016 வரை ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.