tamilnadu

img

சிபிஎம் மாநாடு : மதுரையை கலக்கும் கலை நிகழ்வுகள்

சிபிஎம் மாநாடு : மதுரையை கலக்கும் கலை நிகழ்வுகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு, வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகரின் மையத்தில் அமைந்திருக்கும் தமுக்கம் மைதானத்தில் ஏப்ரல் 2 துவங்கி 6 வரை மிகுந்த எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் பிரகாஷ் காரத், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பிருந்தா காரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், மூத்த தலைவர் பிமன் பாசு ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.  ஏப்ரல் 2 அன்று நடைபெறும் பொது மாநாட்டில், சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் து. ராஜா. சிபிஐ (எம்எல்) விடுதலை பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆகியோர் பங்கேற்கும் கருத்தரங்கம் ஏப்ரல் 3 அன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வுகள் மட்டுமின்றி, நாள்தோறும் மாலை 5 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் - கருத்தரங்க நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இவற்றில், தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற படைப்பாளிகள், கலைஞர்கள், மக்களிசைப் பாடகர்கள் பங்கு பெறுகின்றனர்.

சாலமன் பாப்பையா, ராஜூ முருகன், சசிகுமார்

ஏப்ரல் 2 மாலை பாப்பம்பாடி ஜமா குழுவினரின் பெரிய மேளம், திண்டுக்கல் சக்தி குழுவினரின் போர்ப்பறையுடன் கலைநிகழ்ச்சிகள் துவங்குகின்றன. அதைத்தொடர்ந்து மூத்த தமிழறிஞர்- நாடறிந்த பட்டிமன்ற நடுவர்- பேராசிரியர் சாலமன் பாப்பையா, ‘குக்கூ’, ‘தோழா’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ என மக்களுக்கான சினிமாவை தந்துவரும் இயக்குநர் ராஜூ முருகன், ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் இயக்குநர்- மதுரை மண்ணின் மைந்தர் எம். சசிகுமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, வெற்றிமாறன்

கானா விமலாவின் பாடல்களுடன் ஏப்ரல் 4 அன்றைய மாலை நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. தொடர்ந்து, கேரள மாப்ளா முஸ்லிம் பெண்கள் குழுவின் ஆடல், பாடல் நிகழ்ச்சி, சென்னைக் கலைக்குழுவின் நாடகம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் மக்கட்செல்வனாக வலம்வரும் திரைக்கலைஞர் விஜய் சேதுபதி, ‘நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா’ போன்ற நல்ல திரைப்படங்களைத் தந்துவரும் இயக்குநர் சமுத்திரக்கனி, ‘விசாரணை, அசுரன், விடுதலை’ படங்களின் மூலம் சாதிய - அரசு அதிகார அமைப்புகளின் அடக்குமுறைகளையும், கம்யூனிஸ்டுகளின் அர்ப்பணிப்பு மிக்க போராட்டங்களையும் திரையில் காட்சிப்படுத்திய இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

பிரகாஷ் ராஜ், ரோகிணி,  மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல்

தமிழகம் அறிந்த மக்களிசைப் பாடகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் வலம்வந்தவர் டாக்டர் கே.ஏ. குணசேகரன். அவரது மாணவர் சித்தன் ஜெயமூர்த்தியின் மக்களிசைப் பாடல்களுடன் ஏப்ரல் 5 அன்றைய மாலை நிகழ்வுகள் துவங்குகின்றன. கர்நாடக மாநிலம் டொல்லு குனிதா பெண்கள் குழுவின் போர்முரசு நடனம், தமுஎகச-வின் மாநிலத் துணைத்தலைவரும், திரைக்கலைஞருமான ரோகிணி வழங்கும்‘ஒராள்’ நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் மேடையேறுகின்றன.  ஆர்எஸ்எஸ் - பாஜகவின் வகுப்புவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கருத்துப் பிரச்சாரத்தை நடத்தி வரும் துணிச்சல் மிக்க திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ், மக்களின் மனச்சாட்சியை தட்டியெழுப்பிய ‘பரியேறும் பெருமாள்’ துவங்கி, எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பதிவுசெய்த ‘வாழை’ வரை, சாதிய - வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரான சினிமாக்களை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களையும், அந்தப் பழங்குடி மக்களுக்கு அரணாக களத்தில் நிற்கும் கம்யூனிஸ்டுகளையும் திரைமொழியில் தந்த ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.

நாள்தோறும் மக்களிசைப் பாடல்கள்

இவை மட்டுமன்றி மாநாடு நடைபெறும் 5 நாட்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான மக்கள் பாடகர்கள் கரிசல் குயில் கிருஷ்ணசாமி, பாண்டிச்சேரி உமா, மேட்டூர் வசந்தி, புதுக்கோட்டை சுகந்தி, பாண்டிச்சேரி அன்புமணி, செல்வம், சேகர், உடுமலை துரையரசன், புதுவை விநாயகம், அமரநாதன் ஆகியோரின் மக்களிசைப் பாடல்கள் மகிழ்விக்க உள்ளன. நிகழ்ச்சிகளை மதுரை கரிசலார் ஒருங்கிணைக்கிறார்.

நாள்தோறும் காம்ரேட் கேங்ஸ்டா

மாநாடு நடைபெறும் 5 நாட்களும் இடம்பெறும் கலை நிகழ்வுகளில் காம்ரேட் கேங்ஸ்டா குழுவினரின் எழுச்சிமிகு இசை நிகழ்வும் அரங்கேறுகிறது.