மதுரை, ஜூன் 28- மதுரை மாவட்டத்தில் ஒரே வாரத்தில் ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மதுரையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. தென்மாவட்ட தலைநகராக விளங்கும் மதுரையை கொரோனா பாதிப்பு, ஆட்டம் காணச் செய்துள்ளது என்பது தான் யதார்த்தம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு, பலி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநிலத்தில் 20-ஆவது இடத்தில் இருந்த மதுரை காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை பின்னுக்குத்தள்ளி, முதல் மூன்று இடத்திலுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் வரிசையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா ‘உயிரிழப்பு 20-ஐ தாண்டி விட்டது. கொரோனா மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இறந்தவர்களின் உடல்களை வைக்க கூட மருத்துவமனையில் இடமில்லை. தென்னகத்தின் தலைமை மருத்துவமனையான மதுரை எப்படித் தாங்கும். மாவட்டத்தில் பாதிப்பு துவங்கி மூன்று மாதமாகிறது.
இதுவரை 1,703 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த எட்டு நாளில் மட்டும் 1072 பேரை கொரோனா தாக்கியுள்ளது. இதை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்த நிலையில் மதுரையில் ஞாயிறன்று 287 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்தனர். மதுரை மக்களவை உறுப்பினர் பீதியைக் கிளப்புவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரமே மதுரையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. இதற்கிடையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராசர் பொறியியல் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. நோயாளி எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லலாம். உள்ளே வரலாம். முகக்கவசங்களை தெருக்களில் தூக்கி எறிகின்றனர். இது கல்லூரியையொட்டி அமைந்துள்ள அய்யப்பன் தாங்கல் பகுதியில் தொற்றுபர வாய்ப்பாக அமைந்துவிடுமோ என 12 குடியிருப்போர் சங்கங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன. இந்தக் கோரிக்கையும் ஆர்.பி.உதயகுமாரின் பார்வைக்கே விட்டுவிடலாம். எதில் கவனம் செலுத்தவேண்டும் என்பது அவரது முடிவைப் பொறுத்தது.
அமைச்சர் செய்ய வேண்டியது என்ன?
அமைச்சரின் தொகுதியான திருமங்கலத்தை மையப்படுத்தி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராமங்களில் வீடு வீடாக சோதனை செய்வது குறித்து யோசிக்கலாம். குறிப்பாக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிசிஆர் சோதனைக்கு ஏற்பாடு செய்யலாம். இந்த இயந்திரத்தின் விலை ரு.25 லட்சம் மட்டுமே. கூடுதலாகத் தேவை இரண்டு பணியாளர்கள். இந்த நல்லகாரியத்தை அமைச்சர் செய்தால் திருமங்கலத்தை சுற்றியுள்ள மக்கள் பலன்பெறுவார்கள். தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். இதற்கிடையில் மதுரையில், கொரோனா பாதிப்பு தொடர்பான ஆலோசனை மையம் ஞாயிறன்று திறக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர்செல்லூர் கே.ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு உயிரும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, அதிக பரிசோதனை மேற்கொண்டு, தொற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிர்காக்கும் சிறப்பு மருந்து மதுரைக்கு 500 வந்துள்ளது என்றார்.