பிரதமர் மோடி வருகையைக் கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பிரதமர் மோடி தமிழகம் வருகையைக் கண்டித்து, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநகர் மாவட்டத் தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டோன்மெண்ட் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்யாமல், இஸ்லாமியர்களுக்கு எதிராக வக்பு திருத்த மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில் இந்தி திணிப்பு மற்றும் புயல் நிவாரண நிதி ஒதுக்காமல் இருப்பதைக் கண்டித்தும், நூறு நாள் வேலை திட்டத்தை நிறுத்தி வைத்து தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து, தமிழகத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்தும் தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், மாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாநில சிறுபான்மை பிரிவு மூத்த துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.
வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்த இஸ்லாமிய கூட்டமைப்பு முடிவு
திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் கான்மியான் பள்ளிவாசலில் நடைபெற்றது. இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மஹல்லா ஜமாத் பேரவை நிர்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது அடக்குமுறை சட்டங்களை நிறைவேற்றி வருவதை இந்த கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இதனை எதிர்த்து திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் விரைவில் மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டங்களையும், தொடர் போராட்டங்களையும் முன்னெடுப்பது, திருச்சி மாவட்ட மஹல்லா ஜமாத் பேரவை மூலம் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்து அதிகமான மக்களை பங்கேற்க செய்ய வேண்டும். வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வருகிற 13-ம் தேதி பாலக்கரையில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மஹல்லா ஜமாத் பேரவை, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்,அகில இந்திய முஸ்லிம் லீக், மஜ்லிஸ் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, வஹ்ததே இஸ்லாமிய ஹிந்த், யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு
அரசுப் போக்குவரத்துக் கழக பேராவூரணி கிளையில், தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் பேராவூரணி கிளையில் இயங்கி வரும் தடம் எண். A.10-க்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பேருந்திற்கு பதிலாக புதிய (BS VI) மகளிர் விடியல் பயணம் பேருந்து இயக்கம் மற்றும் பேராவூரணி கிளை தடம் எண். 344 புறநகர் தடப்பேருந்தை, மகளிர் விடியல் பயணம் நகரப் பேருந்தாக (A.4) பேராவூரணி பட்டுக்கோட்டை (வழி) கள்ளங்காடு, குண்டாமரைக்காடு, முனுமாக்காடு, குருவிக்கரம்பை பள்ளிக்கூடம் வழித்தடத்தில் இயக்கம் துவக்க விழா நடைபெற்றது. தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்தனர். விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல பொதுமேலாளர் எஸ். ஸ்ரீதரன், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.