அருப்புக்கோட்டை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற்குழுஉறுப்பினராகவும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும் பணிபுரிந்த தோழர் ஆர்.சந்திரமோகன் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது படத்திறப்பு நிகழ்ச்சி மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து தலைமையேற்றார். மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், ஏ.லாசர் ஆகியோர் படத்தை திறந்து வைத்து குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தை தோழர் ஆர்.சந்திரமோகன் குடும்பத்தாரிடம் வழங்கினர். தோழர் ஆர்.சந்திரமோகன் குறித்து, மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் கூறுகையில், அவரை இழந்துவிட்டோம் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. கட்சியின் ஆலோசனைப்படி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். உழைக்கும் மக்களின் வாழ்க்கை மேம்படுவதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இரவு பகல் பாராமல் ஓடிக்கொண்டே இருப்பார். எளிதில் மக்களோடு மக்களாக இரண்டற கலந்து விடுவார். அவர் இயக்கத்தின் மிகப் பெரியசொத்து. அவரது நினைவுதொடர்ந்து நம்மோடு இருந்து கொண்டே இருக்கும் என தெரிவித்தார்.
விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் கூறுகையில், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொறுப்பை திறம்பட செய்தவர். குறுகிய காலம் பொறுப்பில் இருந்தாலும், 100 நாள் வேலைத் திட்டத்தொழிலாளர்களை ஏராளமான கிராமங்களில் திரட்டி போராட்டம் நடத்தியவர். குறிப்பாக பேரூராட்சியில் உள்ள தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலை வழங்கக் கோரி போராட்டம் நடத்த வேண்டும் என மாநிலக்குழு முடிவு செய்ததை ஏற்று ஏராளமான தொழிலாளர்களைத் திரட்டி மனுக் கொடுக்கும் போராட்டத்தை நடத்தினார். கொரோனா எனும்கொடூரமான நோயால் மரணமடைந்தார். அவர் விட்டுச் சென்று பணியை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறுகையில், கட்சி நிதி வசூலுக்காக பந்தல்குடிக்கு சென்றேன். அப்போது சந்திரமோகன் மட்டும் தான் இருந்தார். இருவர் மட்டும் எப்படி வசூல்செய்வது எனக் கேட்டேன். உடனே, தனது மகனை அழைத்து வந்தார். 3 பேரும் சேர்ந்து கட்சி நிதி வசூல் செய்தோம். கட்சியின் பிளீனம் சுட்டிக்காட்டியபடி பல நேரங்களில் கிராமப் பகுதிகளில் தங்கியிருந்து மக்கள் பணியாற்றியவர் சந்திரமோகன். யாரிடமும் கோபப்பட மாட்டார். மனித உணர்வுகளை மதிக்கக் கூடியதோழர் அவர் என தெரிவித்தார்.கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் கூறுகையில், 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் தீக்கதிர் பத்திரிகை ஒரு மாதம் வெளிவர முடியாத நிலையில் இருந்தது. பின்பு, திருமங்கலம் வரை காரில் தீக்கதிரை கொண்டு வந்து கொடுத்து விடலாம் என நிர்வாகம் தெரிவித்தது. அங்கிருந்து அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளுக்கு எப்படி,யார்? நமது நாளிதழை கொண்டு போவது என மாவட்ட மையம் யோசித்த போது, நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என தானாகவே முன் வந்து தீக்கதிர் நாளிதழை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்த ஓர் அற்புதமான தோழர்என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச்சாமி, ஏ.குருசாமி, எம்.முத்துக்குமார், எம்.தாமஸ், பி.என்.தேவா, வி.முருகன், எல்.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பூங்கோதை, எம்.திருமலை, எம்.சுந்தரபாண்டியன், பி.அன்புச்செல்வன், சி.ஜோதிலட்சுமி, எஸ்.தெய்வானை ஆகியோர்உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில்ஒன்றிய செயலாளர் எம்.கணேசன் நன்றி கூறினார்.