மதுரை ஏப். 15-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மேலூரில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-மோடியை டாடி என்றழைத்து அவரிடம் எடப்பாடிசரணடைந்துவிட்டார். கட்சியையும் அவரிடம் கொடுத்துவிட்டார். “கலெக்சன், கமிஷன், கரப்சன்” மூன்றும் தான் அதிமுக. இதற்காகவே அவர் ஆட்சி நடத்தி வருகிறார். சேர்களை தூக்கி எறிந்து அதிமுகவினர் தேர்தலில் சீட் வாங்கி யுள்ளனர்.அதிமுக ஆட்சி மே 23- ஆம் தேதி முடிவுக்கு வரும். அதிமுக, பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களுக்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் 40 பேரும் வெற்றிபெற்று நாடாளுமன்றம் செல்லப் போவது உறுதி. மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமையும்.பாஜக சாமியார்களின் கட்சி. தமிழகத்தில் தாமரை மலரும் என தமிழிசை தூத்துக்குடி கூட்டத்தில் கூறியுள்ளார். கடலில் எப்படி தாமரை மலரும்?. ஒற்றுமையாக உள்ள மக்களை இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என பிரிக்கும் வேலையை பாஜக செய்துவருகிறது. இந்துத்துவா என்ற மோசமான கருத்தியல் மூலம் நம்முடைய பண்பாட்டைக் கெடுக்கின்றனர்.மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என மறைந்த அண்ணா அன்றைக்கே கூறியுள்ளார். கூட்டணிக் கட்சியினர் கடுமையாக உழைத்து 22 சட்டமன்றத் தொகுதியிலும் திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராவார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியோ, அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியமைந்தாலும் சரி; நரேந்திரமோடி - பாஜக இல்லாத ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். அதற்கு மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.தென்பாண்டி மண்டலத்திற்கு தலைநகராக இருக்கும் மதுரை சரித்திரப் புகழ் பெற்றது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்பதால் யானை கட்டி போர் அடித்த நகரம் மதுரை. இப்போது யானையையும் காணவில்லை. வாய்க்கால்களில் தண்ணீரையும் காணவில்லை. மதுரை நகரம் வளர்ச்சியடைய, விவசாயம், தொழில்வளம் மேம்பட எழுத்தாளர், இளைஞர் சு.வெங்கடேசனை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள். இவ்வாறு ராஜகண்ணப்பன் பேசினார். வேட்பாளர் சு.வெங்கடேசன், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ உள்ளிட்டகூட்டணிக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். (ந.நி.)