tamilnadu

img

இன்று முதல் பணிக்குத் திரும்பும் ‘சாம்சங்’ தொழிலாளர்கள்!

சென்னை, அக். 16 -  தொழிற்சங்க உரிமை மற்றும் தொழி லாளர்களின் கூட்டுப்பேர உரிமை தொடர்பான கோரிக்கைகள் ஏற்கப் பட்டதைத் தொடர்ந்து, ‘சாம்சங் இந்தி யா’ தொழிலாளர்கள், வியாழக்கிழ மை (அக்டோபர் 17) முதல் பணிக்குத் திரும்புகின்றனர். ‘சாம்சங் இந்தியா’ தொழிலாளர் (சிஐடியு) சங்கத்தின் பேரவைக் கூட்டம், காஞ்சிபுரத்தில் புதனன்று (அக்.16) நடைபெற்றது. அரங்கம் நிரம்பி  வழியும் அளவிற்கான எண்ணிக்கை யில் தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்ட இந்தப் பேரவையில், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தர ராசன், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத் தலைவர் இ.முத்துக்குமார், கே.சி.கோபி குமார், ஸ்ரீதர், ஆர். கார்த்திக், சாம்சங் தொழிலாளர் சங்க  பொதுச் செயலாளர் எல்லன், பொருளாளர் ஆர். மாதேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வரின் அறி வுறுத்தலின்கீழ், அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களாக சாம்சங் நிர்வாகம் - தொழிலாளர் நலத்துறை - சிஐடியு தொழிற்சங்கம் இடையே நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை தலைவர்கள் விளக்கினர். தொழிலாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பதிலளித்தனர். அதனைத் தொடர்ந்து, முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டை ஏற்றுக்கொண்டு, 1500-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கடந்த 37 நாட்களுக்கும் மேலாக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புவதென்று முடிவு செய்தனர்.  தங்களின் போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்கட்டும், தொழிற்சங்க ஒற்றுமை ஓங்கட்டும் என்று விண்ணதிர முழக்கங்களையும் எழுப்பினர். தொடர்ந்து, வியாழக்கிழமை முதல் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் தங்களின் வழக்கமான பணிக்குத் திரும்புகின்றனர்.

அ. சவுந்தரராசன் பேட்டி

பேரவைக்குப் பிறகு, சிஐடியு தொழிற்சங்கத் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சிஐடியு மாநிலத் தலைவர்  அ. சவுந்தரராசன் கூறியதாவது: “சென்னை தலைமைச் செயலகத்தில் அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத் திற்கு தீர்வு காண்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நான்கு பேர் பங்கேற்றனர். தொழிலாளர் நலத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில், எங்களது கோரிக்கை குறித்து கேட்டனர். அதற்கு, நாங்கள் ஏற்கெனவே கொடுத்துள்ள கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தோம். மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில், சாம்சங் நிர்வாகத்தினர் எங்களோடு அமர்ந்து பேச முன்வரவில்லை என்றாலும் பரவாயில்லை; தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு அவர்கள் வரவேண்டும்; நாங்கள் கொடுத் திருக்கும் கோரிக்கை மனுவுக்கு பதிலை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும்; அதன்பிறகு, சமரச பேச்சுவார்த்தை நடக்கட்டும்; இதில் என்ன பதில் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்; ஒருவேளை எந்த முடிவுக்கும் வரவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்லட்டும். இது தான் அனைத்து இடங்களிலும் நடக்கிறது; இதுதான் சட்டத்தின் வழிமுறை; இதைக்கூட ஒரு  நிர்வாகம் எப்படி செய்ய மறுக்க முடியும்? என்றெல்லாம் எங்கள் தரப்பு வாதங்களை வலுவாக வைத்தோம். அதன்பிறகு, சாம்சங் நிர்வாகத்துடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் என்ன பேசப்பட்டது என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், இறுதியில் எங்கள் தரப்பில் வைத்த கோரிக்கையை நிர்வாகத்தினர் ஏற்றுக் கொண்டனர். 

எங்களது மற்றொரு கோரிக்கை, வேலை நிறுத்தத்தை ஒட்டி எந்தப் பழிவாங்கும் நட வடிக்கையும் இருக்கக்கூடாது என்பதாகும். ஒரு விதத் தயக்கத்திற்கு பிறகு இதையும் ஏற்றுக் கொண்டனர். தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பும் போது சுமூகமான நிலை ஏற்பட  வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் தொழி லாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீங்கள்  கேட்டாலும், கேட்காவிட்டாலும் தொழி லாளர்கள் கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்துடன் தான் நடந்து கொள்வார்கள் என்று எங்கள் தரப்பில் தெரிவித்தோம்.  இவை அனைத்தையும் அறிவுரைகள் என்ற  பெயரில் தொழிலாளர் நலத்துறை அலுவலர்  கொடுத்தார். அதன்மீது, ஆலை நிர்வாகத்தில் இருந்து வந்தவர்களும் தொழிலாளர்கள் சார்பில் பங்கேற்ற நாங்களும் ஒப்புக் கொள்கிறோம் என்று கையெழுத்திட்டோம். அதன்பிறகு, இதுதான் அறிவுரை என்று தொழி லாளர் நலத்துறை அலுவலர் ஒரு கையெழுத் திட்டார். இது முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் உருவான ஒரு அறிவுரையாகும். இது கிட்டத்தட்ட ஒப்பந்தத்திற்கு சமம்.  இதையடுத்து, முத்தரப்பு பேச்சுவார்த்தை முடிவுகளை, புதனன்று (அக்.16) நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் தொழிலாளர்களிடம் விளக்கமாக கூறினோம். இந்த கூட்டத்தில் தொழிலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும், எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதில் அளித்தோம். அதற்கு பிறகு, போராட்டத்தை திரும்பப்பெறலாம் என்ற ஒரு முடிவை எடுத்திருக்கிறோம். இதையடுத்து, அக்டோபர் 17 ஆம் தேதி தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புகிறார்கள்” என்றார்.

இ. முத்துக்குமார்

இ. முத்துக்குமார் பேசுகையில், “சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் 37 நாட்களாக நடை பெற்ற மகத்தான வேலை நிறுத்தம் நல்ல முறையில் முடிந்திருக்கிறது. பொதுவாக ஒரு போராட்டம் என்றால், அதுவும் வேலை நிறுத்தம் என்றால் மிகப்பெரிய அளவில் வன்முறை,  கலவரம் இருக்கும். தீர்ப்பாயம், நீதி மன்றத்திற்கு எல்லாம் செல்லும். ஆனால், இந்த  தொழிலாளர்கள் போராட்டம் உறுதிமிக்க தொழிற்சங்க நேர்த்தியுடன் நடைபெற்றது. இந்த போராட்டத்தை உலகே வியந்து பார்க்கிறது. இந்த போராட்டத்தின் முடிவும்  தொழிலாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. இந்தப் போராட்டம், தொழிற் சங்க இயக்கம் தனது அடிப்படையான கூட்டுப் பேர உரிமை, சம வேலைக்கு சம  வாய்ப்பு பெறும் உரிமை, நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் உரிமைகளை முறை யாக அனுபவிக்கும் உரிமை தொழிலாளர் களுக்கு உள்ளது என்பதை உறுதிசெய்திருக் கிறது” என்றார்.