கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை பிரதமருக்கு முதலமைச்சர்
கடிதம் சென்னை,ஏப்.3- கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என்று வலி யுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏப்ரல் 2 அன்று கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 3 அன்று கடிதம் எழுதி யுள்ளார். அக்கடிதத்தில், 1974 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா - இலங்கை ஒப்பந்தம்தான் (கச்சத்தீவு ஒப்பந்தம்) நீடிக்கின்ற இப்பிரச்சனைக்கு அடிப்ப டையாக உள்ளது என் பதை தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்தி லிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்த்து வந்துள்ளதையும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். மேலும், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் சீரான குடிநீர் விநியோகம்
பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. தாமோதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “கோவை மாவட்டத்திற்கு 380 எம்எல்டி தண்ணீர் கொடுத்தாலும் குடிநீர் பிரச்சனை உள்ளதாக உறுப்பினர்கள் தெரி வித்துள்ளனர். குறிப்பாக ஒரு சில பகுதிகளில் 3 நாட் களுக்கு, 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதாக கூறியுள்ளனர். எனவே, கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு துறை செயலாளர் மூலம் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
வக்பு மசோதா நிறைவேற்றம் : சட்டப் போராட்டம் நடத்த முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு
புதுதில்லி,ஏப்.3- எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி புதனன்று மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. ஏப்ரல் நான்காம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைவதால், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை புதனன்று மதியம் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ஒன்றிய சிறுபான்மையினர் விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் விவாதத்தை துவக்கி வைத்து பேசினார். இம் மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் மீதும் இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல். இந்த மசோதாவின் பிரிவு 3 இன்படி, சிறுபான்மையினர் இப்போது தங்கள் மத அடையாளத்தை சான்றிதழ்களுடன் நிரூபிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். நாளை மற்ற மதங்களை சேர்ந்தவர்களும் இதேபோல நிர்பந்திக்கப்படுவார்கள். இது அரசியலமைப்பின் 26 ஆவது பிரிவுக்கு எதிரானது என கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் விவாதத்தில் எதிர்ப்பு தெரிவித்த போது, குறுக்கிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் வக்பு மசோதா முஸ்லிம்களின் மத விஷயங்களிலும்அவர்கள் நன்கொடையாக வழங்கும் சொத்துக்களிலும் தலையிடுவதாக வதந்தி பரப்புவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். விவாதத்திற்கு பதிலளித்த ஒன்றிய சிறுபான்மை விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ‘இந்த சட்டத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை எனவும் இது வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டது எனவும் வழக்கம் போல எந்த விமர்சனத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பேசினார். விவாதம் நள்ளிரவு கடந்து வியாழன் அதிகாலை வரை சுமார் 12 மணி நேரம் நடந்த நிலையில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. இதையடுத்து மசோதா நிறைவேறியதாக நள்ளிரவு 2 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மசோதாவிற்கு ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முஸ்லிம் அமைப்புகள் மட்டுமின்றி ஜனநாயக அமைப்புகள் மதச்சார்பற்ற கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்த முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சட்ட மசோதாவை வியாழனன்று மாநிலங்களவையில் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். வக்பு நிலத்தை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆக்கிரமித்திருப்பதாக மக்களவையில் அனுராக் தாக்கூர் அவதூறு தெரிவித்திருந்தார். இதையடுத்து அனுராக் தாக்கூர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திமுக உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் இது அர சியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.