tamilnadu

img

பிரிட்டனைப் புரட்டியெடுத்த மார்க்சைப் பற்றி பிரிட்டனின் அடிமைக் கும்பல் பேசலாமா? - அ. அன்வர் உசேன்

பிரிட்டனைப் புரட்டியெடுத்த மார்க்சைப் பற்றி  பிரிட்டனின் அடிமைக் கும்பல் பேசலாமா?

தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்களுக்குச் சில பெயர்களைக் கேட்டாலே ஆத்திரம் பொங்கி விடுகிறது. அதில் மிக முக்கியமான பெயர் காரல் மார்க்ஸ்! தொடர்ந்து பல சமயங்களில் மார்க்ஸ் மீது தனக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தியுள்ள ரவி, நவம்பர் 25 அன்று, இந்தியாவுக்கு ஏகாதிபத்தியம் தேவை எனவும், ஆங்கிலேயர் ஆட்சி நன்றாக இருந்ததாகவும் மார்க்ஸ் கூறியதாக பேசியுள்ளார். இது கடைந்தெடுத்த பொய்!

நியூயார்க் டெய்லி டிரிபியூன் எனும் அமெரிக்கப் பத்திரிகைக்கு 1853 முதல் 1861 வரை மார்க்ஸ் இந்தியா குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.  தனது தலைசிறந்த படைப்பான மூலதனத்திலும் இந்தியா குறித்துப் பல இடங்களில் குறிப்பிட்டுள் ளார். ஆனால், எங்கும் அவர் பிரிட்டன் ஆட்சி இந்தியாவுக்குத் தேவை எனக் கூறியது இல்லை. மாறாக, இந்தியாவை எப்படியெல்லாம் பிரிட்டன் கொள்ளையடித்தது என்பதையும், இந்தியாவின் பண்பாட்டை எப்படிப் பிரிட்டன் சூறையாடியது என்பதையும் மார்க்சைப் போல இன்னொருவர் எழுதியிருப்பாரா என்பது சந்தேகமே. அவற்றின் சில பகுதிகளை ஆளுநர் வாசித்திருந்தால் கூட இப்படி உண்மைக்குப் புறம்பாகப் பேசியிருக்க மாட்டார். தெரிந்திருந்தும் திட்டமிட்டுப் பொய்யையும் அவதூறையும் பரப்புகிறார் என்பதே உண்மை. 

இந்தியாவுக்கு அழிவைத் தந்த பிரிட்டன்

இந்தியாவில் பிரிட்டன் நடத்திய கொள்ளை உலக வரலாற்றில் ஈடு இணையற்றது, ஈவிரக்கமற்றது என்கிறார் மார்க்ஸ். இந்தியாவிலிருந்து “புதையல்” அதாவது வரி என்ற பெயரில் செல்வம் இங்கிலாந்து க்குக் கடத்தப்பட்டது என்கிறார். இதனை வழிப்பறிக் கொள்ளை (extort) என மார்க்ஸ் வர்ணிக்கிறார்.  *    இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குக் கிடைத்த வருவாயில் 60% நில வரியிலிருந்தும், 14% அபின் விற்பனையிலிருந்தும், 11% உப்பு வரியிலிருந்தும் கிடைத்தது என அம்பலப்படுத்தினார்.  *    1851-52 ஆம் ஆண்டு மட்டும் 19.8 மில்லியன் பவுண்ட்கள் (இன்றைய மதிப்பு ₹17 லட்சம் கோடி) இந்தியாவிலிருந்து வருமானமாக இங்கிலாந்துக்குச் சென்றது. இது 1880-இல் ஆண்டுக்கு 30 மில்லியன் பவுண்டுகளாக (இன்றைய மதிப்பு ₹25 லட்சம் கோடியாக) உயர்ந்தது, என்று விவரித்தார் மார்க்ஸ்.  *    தனிப்பட்ட அதிகாரிகளும் இந்தியாவைக் கொள்ளை அடித்துச் சொத்துக்களைப் பெருக்கிக் கொண்டனர். ராபர்ட் கிளைவ் ஒரு மகா திருடன் எனச் சாடுகிறார் மார்க்ஸ். 

விவசாயிகளைச் சுரண்டிய பிரிட்டிஷார்

நில வரிக் கொள்ளையை அதிகரிக்க ஜமீன்தாரி முறை மற்றும் ரயத்வாரி முறை உருவாக்கப்பட்டது. விவசாயிகள் பிழிந்தெடுக்கப்பட்டனர். விவசாயி உயிர்வாழ மட்டுமே அனுமதிக்கப்பட்டார். ஜமீன்தாரி  முறை மூலம் வங்கத்தில் இருந்த அனைத்து விவசாயி களின் நில உரிமையும் ஒரே ஆணையில் பறிக்கப்பட்டது.  தனது சொந்த தேவைக்கு இல்லாமல் பிரிட்ட னின் தேவைக்கு பருத்தி, சணல், இண்டிகோ, கம்பளி ஆகியவற்றை உற்பத்தி செய்ய இந்தியா நிர்பந்திக்கப்பட்டது. இதனால் உணவுப் பொருட்கள் விளைச்சல் சரிந்து உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.  இதன் விளைவாக ஒரிசாவில் 1866-இல் உருவான கொடூரமான பஞ்சத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமா னோர் உயிர் இழந்தனர் எனக் குறிப்பிடுகிறார் மார்க்ஸ். இது பழிவாங்கும் இரத்தவெறி பிடித்த செயல் என்கிறார். 

பருத்தியின் தாயகத்தில் அந்நியப்பருத்தி திணிப்பு

பருத்திக்குத் தாயகமாக இருந்த இந்தியா எப்படிச் சரிந்தது என்பதை மார்க்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:  *    ஐரோப்பியச் சந்தையிலிருந்து இந்தியப் பருத்தியை இங்கிலாந்து முதலில் விரட்டியது. பின்னர், பருத்தியின் தாயகமான இந்தியாவில் வேறு பருத்தியை இமாலய அளவு திணித்தது.  *    1818 - 1836 இடையே இந்தியாவில் இங்கிலாந்தின் பருத்தி இறக்குமதி 5200 மடங்கு அதிகரித்தது.  *    மஸ்லின் துணி தொழிலில் கொடி கட்டிப் பறந்த டாக்காவின் மக்கள் தொகை 1,50,000 இலிருந்து 20,000 ஆக வீழ்ந்தது.  “மான்செஸ்டர் பஞ்சாலைகளுக்காக இந்தியா அழிக்கப்பட்டது” எனக் குறிப்பிடும் மார்க்ஸ், “தொழில்  நசிந்த காரணத்தால் உயிரிழந்த நெசவாளிகளின் எலும்புகள் சமவெளி பிரதேசத்தை வெள்ளை நிறமாக மாற்றிவிட்டன” என மூலதனம் நூலில் குறிப்பிடுகிறார். 

அழிவும் புத்தாக்கமும்  

இந்தியச் சந்தையைத் தமது கைகளில் முழுமையாகக் கொண்டுவர, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது சுயநலனுக்காக இரண்டு வரலாற்று நிகழ்வுகளை அரங்கேற்றியது: ஒன்று அழிவுச் செயல் (பழைய சமூக உற்பத்தி முறை களை அழித்தது); இன்னொன்று புத்தாக்கச் செயல் (Regeneration) (நவீன சமூகம் உருவாக்குவதற்கு அடித்தளம் இட்டது). இரண்டையுமே தனது சுயநல னுக்காகவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அரங்கேற்றி யது என மார்க்ஸ் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.  மார்க்ஸ் முன்வைக்கும் புத்தாக்கம் என்பது,  வரலாற்று அடிப்படையிலான சமூகப் பரிணாமத்தைக் குறிப்பிடுவது ஆகும். ரயில்வே மற்றும் தகவல் தொடர்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக ஒரு நவீன வர்க்கம் முதலாளித்துவ வர்க்கம் உருவாவதற்கும், அதனுடன் தவிர்க்க இயலாத இன்னொரு நவீன வர்க்கமான தொழிலாளி வர்க்கம் உருவாவதற்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அடித்தளம் அமைத்தது. இதன் விளைவாகத் தன்னை வீழ்த்தும் சக்திகளைத் தானே உருவாக்க நேரிடும் என்பதைப் பிரிட்டன் உணரவில்லை எனவும் மார்க்ஸ் கணித்துக் கூறினார்.  “இங்கிலாந்து முதலாளித்துவம் இந்திய மக்களைச் சமூகத் துயரங்களிலிருந்து விடுதலை செய்யாது! ஆனால், அந்த விடுதலைக்கான புறச்சூழல்களைத் தனது சுயநலனுக்காக உருவாக்கும்!” என்றார் மார்க்ஸ். 

1857 கிளர்ச்சி மற்றும் மார்க்சின் நம்பிக்கை

 1857 கிளர்ச்சி எனப்படும் முதல் இந்திய விடுதலைப் போர் வெடித்த தகவல் வந்தவுடன், மார்க்ஸ் முழுமை யாகக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான நிலை எடுத்தார். இது சிப்பாய்கள் கலகம் அல்ல; தேசியக் கிளர்ச்சி என முதலில் கூறியது மார்க்ஸ்தான்! “மான்செஸ்டர் முதலாளிகளுக்கு இந்தியச் சந்தையை உத்தரவாதப்படுத்தவே இந்திய மக்கள் மீது இங்கிலாந்து மிகக் கொடிய தாக்குதல்களை நடத்தி, முதல் விடுதலை யுத்தத்தை ரத்தத்தில் மூழ்கடித்தது” என அம்பலப்படுத்தினார்.  *    “பிரிட்டிஷாரின் நாகரிகம் இங்கிலாந்தில் மேன்மையானது; ஆனால், இந்தியா போன்ற காலனிகளில் அது அம்மணப்பட்டு நின்றது,” என்கிறார் மார்க்ஸ்.  *    இந்தியா ஒரு மகத்தான தேசம்; இந்தியர்கள் புத்திசாலிகள், வீரம் படைத்தவர்கள், அமைதியானவர்கள் என மார்க்ஸ் மெச்சுகிறார். இந்தியா நிச்சயமாக புத்துயிர் பெறும் எனும் நம்பிக்கையை மார்க்ஸ் வெளிப்படுத்துகிறார்.  இந்திய மக்கள் முழுமையாக விடுதலை பெறுவதற்கு மார்க்ஸ் இரண்டு வழிகளைச் சொன்னார்: பிரிட்டனில் தொழிலாளி வர்க்க ஆட்சி அமைய வேண்டும் அல்லது இந்தியர்கள் தமது வலிமையைப் பெருக்கிப் பிரிட்டிஷ் அடிமை ஆட்சியை முழுமையாகத் தூக்கி எறிய வேண்டும். மார்க்ஸ்  சொன்ன இரண்டாவது நிகழ்வுதான் நடந்தது!  பிரிட்டிஷ் ஆட்சியை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தோடு மிக ஆழமாக விமர்சனம் செய்து அம்பலப்படுத்தியது மட்டுமல்லாமல், இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கி எறிவார்கள் என 1850களிலேயே கணித்த மாபெரும் மேதை காரல் மார்க்ஸ். இத்தகைய மகத்தான புரட்சியாளரை பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்தார் எனக் கூறுவது அபத்தமானது. ஆங்கிலேயருக்கு அடிமைச் சேவகம் செய்த ஆர்எஸ்எஸ்சின் வாரிசுகளின் இத்தகைய கடைந்தெடுத்த பொய்கள் மூலம் காரல் மார்க்ஸ் மீது இந்திய உழைப்பாளிகளுக்கு இருக்கும் நன்மதிப்பைச் சிதைக்க இயலாது.