நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்
சென்னை, ஆக. 26 - தமிழகத்தில், நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில், செவ்வாயன்று காலை நடை பெற்றது. அப்போது, நகர்ப்பு றங்களில் அரசு உதவி பெறும் 2,429 பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்ட விரிவாக்க த்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு உண வைப் பரிமாறி திட்டத்தை துவக்கி வைத்த முதல மைச்சர், அவர்களுடன் தானும் அமர்ந்து காலை உணவு உண்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொண்டார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி. கீதாஜீவன், மா. சுப்பிர மணியன், பி.கே. சேகா்பாபு மற்றும் எம்.எஸ். சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறு வனத்தின் இயக்குநர் சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 34,987 பள்ளிகளைச் சேர்ந்த 17 லட்சத்து 53 ஆயிரத்து 257 மாணவ, மாணவியர் ஏற் கெனவே பயன்பெற்று வரு கின்றனர். தற்போது நகர்ப் புற உதவிபெறும் பள்ளிக ளுக்கும் திட்டத்தை விரிவா க்கியதன் மூலம் 2,429 பள்ளி களைச் சேர்ந்த மேலும் 3.06 லட்சம் குழந்தைகள் பயனடைய உள்ளனர்.
கல்விக்கு செய்வது செலவல்ல; சமூக முதலீடு
காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது, “குழந்தைகளுடன் இணைந்து காலை உணவு சாப்பிட்டதால் குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்து விட்டது. இன்றைய நாள் என் மனதுக்கு நிறைவான நாள். மகிழ்ச்சிக்குரிய நாள். எப்படி நீங்கள் நாள் முழுவதும் ஆக்டிவாக இருப்பீர்களோ, அதுபோலவே நானும் இன்றைய நாள் முழுவதும் ஆக்டிவாக இருப்பேன். இந்தத் திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால் இதைவிட மகிழ்ச்சியானது என்ன இருந்து விடப் போகிறது” என்று குதூகலத்தை வெளிப்படுத்தினார். மேலும், “முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஆண்டொன்றுக்கு ரூ.600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இதனை செலவு என நான் சொல்ல மாட்டேன். இது சிறப்பான சமூக முதலீடு. எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு லாபத்தை தமிழ்ச் சமுதாயத்திற்கு தரப்போகும் முதலீடு” என்று கூறிய முதலமைச்சர், “மாணவச் செல்வங்களின் திறமை, அறிவு, ஆற்றல் மீது நம்பிக்கை வைத்து இந்த முதலீட்டை தமிழ்நாடு அரசு செய்கிறது. நீங்கள் எல்லோரும் படித்து முன்னேறி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றினால், அதுதான் இந்த திட்டத்தின் உண்மையான வெற்றி” என்று தெரிவித்தார்.