திருவள்ளூர், ஜன.1- பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் தனக்குத்தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு,திமுக அரசை கண்டிப்பதாகக் கூறிக்கொண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வீட்டின் முன்பு தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். இந்த போராட்டம் கேலிக்குரியதாக மாறிவிட்டது. இதனால் பாஜக தலைவர்களும் கட்சியினரும் கடுப்பில் உள்ளனர். இந்த கடுப்பை அதிகப்படுத்தும் விதமாக, அண்ணாமலையின் போராட்டத்தை போல ஒரு போராட்டத்தை பாஜக நிர்வாகி ஒருவரே நடத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் பாஜகவின் கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக உள்ளார். தற்போது பாஜக உள்கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக நிர்வாகி கோகுலகிருஷ்ணன் கட்சியின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் முன்பாக சாட்டையால் தன்னைத்தானே ஆறு முறை அடித்துக்கொண்டு தனது எதிர்ப்பினை கட்சி தலைமைக்கு தெரிவித்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டம் திருவள்ளூர் மாவட்ட பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.