tamilnadu

img

புதுச்சேரியில் பாஜக முயற்சி வெற்றி பெறாது.... நாராயணசாமி அரசு கவிழாது..... கே. எஸ். அழகிரி....

நாகர்கோவில்:
தென்னிந்தியாவில் பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது.புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழாது. இந்த முயற்சியில் பாஜகவிற்கு தோல்வியே ஏற்படும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி கூறினார். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 1 ஆம் தேதி  கன்னியாகுமரி வருகிறார். அப்போது அவருக்கு அளிக்கப்பட வேண்டிய வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஞாயிறன்று நாகர்கோவிலில் கட்சி நிர்வாகிகளிடம் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே. எஸ் அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

பெட்ரோல். டீசல் விலை ஏற்றத்தை குறைக்க எந்த திட்டமும் மோடி அரசிடம் இல்லை. மோடிக்கு  52 அங்குலமார்பு இருக்கலாமே தவிர மக்களின் பொருளாதாரத்தை சிந்திக்க கூடிய  ஆற்றல்கிடையாது. மோடி மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு புதிய பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார். ஒரு பிரச்சனையையும் தீர்க்க இயலாத அரசாக மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது. பணமதிப்பு இழப்பு திட்டத்தை கொண்டு வந்தார் அது வெற்றி அடையவில்லை. வெற்றியடைவில்லை என்பதை மோடி நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். 

சிறுபான்மை மக்களின் போராட்டங் களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இப்போது அனைத்தும் வாபஸ் பெற்று விட்டதால் சிறுபான்மையினரின் வாக்கு கிடைக்காது. இது வேடிக்கையாக உள்ளது. எடப்பாடியின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இவ்வளவு நாட்கள் ஆகியும் இந்த அரசால்  இரண்டாவதாக ஒரு கல்லை கூட எடுத்து வைக்க முடியவில்லை. இது அதிமுக அரசின் தோல்விக்கான சான்றாகஅமைகிறது. கமல், ரஜினி  நண்பர்கள்.அவர்களை சந்திப்பது அரசியலில் எந்ததாக்கத்தையும்  ஏற்படுத்தாது. தற்போதைய அரசு தனியார் நிறுவனங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என கருதுகிறது.  இதற்கு பிஎஸ்என்எல் ஓர் உதாரணம். பிஎஸ்என்எல்லின் காலை முறித்து ஜியோவிற்கு கொடுத்துள்ளார்கள். தமிழக காங்கிரஸ் செயற்குழு 24 ஆம் தேதி கூடுகிறது. அதன்பிறகு தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவெடுப்போம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு இல்லை. எங்கள் அணியில் கட்சிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. தமிழக சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்புஅளிக்கப்படும். பழையன கழிதலும், புதியன புகுத்தலும் என்ற அடிப்படையில் புதிய வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.