பாலர் பூங்கா
குருவி யெல்லாம் பறக்கும்!-மனம் கூட சிறகு அடிக்கும்! அருவி யெல்லாம் குதிக்கும்-மனம் அதிலே வீழ்ந்து குளிக்கும். பசுவும் கன்றை நக்கும்!-கன்று பாலை முட்டிக் குடிக்கும்! பசுவும் நமக்குத் தாயாம்-விரும்பிப் பாலை நமக்குக் கொடுக்கும் மரத்தின் கனிகள் இனிக்கும்-அருள் மாந்தர் சொல்லும் இனிக்கும் நிறங்கள் பலவாய் இருக்கும்-சோலை நின்று பாரு மணக்கும். வான வில்லைப் பாரு-அதன் வண்ணம் வேறு வேறு. வான வில்லின் நிறங்கள் -எண்ணி வந்து நீயும் கூறு. தேனீ பூவை நாடும் !-அதில் தேங்கும் தேனைத் தேடும். நீயும் நூல்கள் நாடு!-அதில் நிறைந்த அறிவைத் தேடு. காணும் காட்சி தன்னில் -நாமும் கற்கும் பாடம் இருக்கு. தேனாய் இனிக்கும் பாப்பா-இதைத் தெளிந்தால் நன்மை இருக்கு.
