tamilnadu

img

2 ஆண்டுக்கு மேலாக மருத்துவர் இல்லாத கால்நடைத் துறை மருத்துவமனைகள்

மன்னார்குடி:
மன்னார்குடி கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் பணியிடம் இரண்டுஆண்டுக்கு மேலாக காலியாக உள்ளது. திருவாரூர், மன்னார்குடி என இரண்டு கால் நடை கோட்டங்கள் உள்ளன. இதில் மன்னார்குடியில் உள்ள மருத்துவமனையில் கால்நடைசர்ஜன் என்ற தகுதி நிலை பணியிடம் காலியாக உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 72 கால்நடை மருந்தகங்கள் உள்ளன. இவைகளில் திருவாரூர் கோட்டத்தில் 20 கால்நடை மருத்துவர்களும், மன்னார்குடி கோட்டத்தில் 16 கால்நடை மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். அதாவது 50 விழுக்காடு கால்நடைஉதவி மருத்துவர்களின் பணியிடங்கள் எட்டுஆண்டுகளாக காலியாக வைக்கப்பட்டுள் ளன. மருத்துவர்கள் உள்ள மருந்தகங்களிலும் போதுமான அளவில் மருந்துகளும் இல்லை. திருவாரூர், மன்னார்குடி ஆகிய இரண்டு கோட்ட தலைநகர்களில் மூன்று உதவிஇயக்குனர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில்இரண்டு பணியிடம் காலியாக உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 9 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. இதில் மூன்றுமருத்துவமனைகளில் கால்நடை சர்ஜன்கள்இல்லை. ஒன்பதில் ஐந்து மருத்துவமனைகளில் ஐந்தில் எக்ஸ்ரே கருவிகள் உள்ளன. ஆனால் அதற்கான ரேடியோகிராபர் பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் எக்ஸ்ரேகருவி பயன்படுத்தப்பட முடியாமல் உள்ளது.

எளிதில் நம்பமுடியாத அதிர்ச்சி தரும் இந்தசெய்தி தான் உண்மை என்று கால்நடைத் துறை வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.மாநிலம் முழுமையிலும் கால்நடை துறையில் இதே அவல நிலை நிலவுகிறது என்றாலும் மாநிலத்திலேயே வேளாண் சாகுபடிசெறிவு அதிகமுள்ள திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கால்நடைத்துறையின் அடிப்படை கட்டமைப்பு மாநில அரசின் அலட்சியத்தால் மிகப் பரிதாபகரமான நிலையில் உள்ளது. தமிழகத்தில் கிராமப் பொருளாதாரத்தின் அடிப்படையே விவசாயமும் கால்நடைவளர்ப்பு தான்.

வாய்மொழித் தேர்வுக்காககாத்திருக்கும் மருத்துவர்கள்
அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களான நாகைப்பட்டினம், திருவாரூர் மாவட் டங்களில் சிறு குறு விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் கால்நடை வளர்ப்பும் அதன் மூலம் கிடைக்கும்வருவாயும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால்கால்நடைத் துறையின் அடிப்படை கட்டுமான நிலையோ படுமோசமாக உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் 1141 கால்நடை உதவி மருத்துவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் முடிவடைந்து வாய்மொழி தேர்வுகளுக்காக காத்திருப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த எண்ணிக்கையை தவிர 636 பணியிடங்கள் தற்காலிக மருத்துவர்களால் நிரப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின் றன. ஆக ஜூலை 2020 முடிய சுமார் 2000 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் தமிழ் நாடு கால்நடை துறையில் நிரப்பப்படாமல் உள்ளது.

கறவை மாடுகளுக்கு நோய் வந்தால்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.துரைசாமி கூறுகையில், மானிய விலையில் கால்நடை தீவனங்கள் விநியோகம் செய்வதற்கு அரசு தயாராக இல்லை. ஏறிவரும் விலைவாசி உயர்விற்குஏற்ப கட்டுபடியாகும் பால் கொள்முதல் விலையும் உற்பத்தியாளருக்கு கிடைக்கவில்லை.குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில்பெரும்பாலான கால்நடை மருந்தகங்களில் மருத்துவர்கள் இல்லை; போதுமான மருந்துகளும் இல்லை. இந்நிலையில் மருத்துவர்கள்இல்லாத பெரும்பாலான கிராமங்களில் கறவை மாடுகளுக்கு நோய் வந்தால் வைத்தியம் பார்ப்பதற்கு வெளியிலிருந்து ஆட்களைகொண்டுவந்து சொந்த செலவில் தங்கள் கறவை மாடுகளுக்கு பால் உற்பத்தியாளர்கள் வைத்தியம் செய்து வருகிறார்கள். இது ஒரு மோசமான நிலையாகும். மருத்துவர்கள் காலியிடங்களை தமிழக அரசு இனியும் தாமதம் செய்யாமல் நிரப்பிட வேண்டும் என்று கூறினார்.

காணொலி தேர்வு அல்லது வாய்மொழி தேர்வு ரத்து
பணியாளர் தேர்வாணையத்தால் எழுத்துத் தேர்வுகள் முடிவடைந்தாலும் வாய்மொழி தேர்வுகள் நடத்தப்படாததற்கு கொரோனா தொற்று காரணமாக கூறப்படுகிறது. ஓய்வு பெற்ற கால்நடைத்துறை இணை இயக்குநர் ஒருவர் கூறும்போது, இந்த கொரோனா காலத்தில் எல்லா திட்டங்களையும் அரசு நிறைவேற்றிக் கொள்ளவே செய்கிறது. மாவட்டங்களுக்கிடையே உள்ள விவாதங்களை மாநில அரசும் மத்திய-மாநிலங்களுக்கிடையிலான விவாதங்களை எல்லாம் நேரலை வீடியோ விவாதங்களின் மூலம் முடிவுகளை எடுக்கும் போது பொருத்தமான மாறுதல்களுடன் கால்நடை மருத்துவர்களின் வாய்மொழி தேர்வுகளையும் வீடியோ தேர்வாகநடத்தி முடிக்க முடியும்.அல்லது வாய்மொழி தேர்வை ரத்துசெய்து எழுத்துத்தேர்வையே அடிப்படையாகக் கொண்டு உதவி மருத்துவர்கள் நியமனத்தை வழங்கி விடவும் முடியும். ஆனால் இப்போது தேவை ஒரு அவசியத்தை உணர்ந்தஅரசின் கொள்கை முடிவு மட்டுமே என்று ஓய்வுபெற்ற அந்த இணை இயக்குநர் கூறினார். வேளாண் துறையும் கால்நடைதுறையும் கிராமப் பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கின்றன. அரசு இதை உணரவேண்டும். உடனே கால்நடை உதவி மருத்துவர்களின் நியமனத்தை வழங்கிடுவதற்கு காலத்திற்கேற்ற அவசர நடவடிக்கைகளை மாநில அரசும் தேர்வாணையம் உடனே எடுத்திட வேண்டும். 

தட்டுப்பாடின்றி மருந்துகள் கால்நடை மருத்துவமனைகள் மருந்தகங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும். நவீன கால்நடை கருவிகளையும் அதற்கான ஊழியர்களின் நியமனத்தையும் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும். இதை தான் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். மாநில அரசு நடவடிக்கை எடுக்குமா?

====ப.தெட்சிணாமூர்த்தி====