கூலி வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.13 கோடி ஜிஎஸ்டி வரிபாக்கி நோட்டீஸ்!
வேலூர், டிச.6 – குடியாத்தம் தனியார் தொழிற்சாலை யில் கூலிவேலை செய்யும் பெண் தொழி லாளிக்கு ரூ13 கோடி ஜிஎஸ்டி வரிபாக்கி அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் மகாலிங்கத்தின் மனைவி யசோதா குடியாத்தம் அருகே உள்ள தனியார் காலனி தொழிற்சாலையில் மாதம் ரூ.8ஆயிரம் சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். வியாழனன்று சம்பளம் கணக்கில் போடப்பட்ட நிலையில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றபோது போதிய இருப்பு இல்லை என பணம் எடுக்க முடியவில்லை. இது குறித்து கணக்கு வைத்துள்ள தனியார் வங்கியில் கேட்டபோது வங்கி அதிகாரிகள் யசோதா 13 கோடி ரூபாய்க்கு ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்துள்ளதாகவும் அதனால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கூலி வேலை செய்யும் தாங்கள் எப்படி ரூ.13 கோடி வரி பாக்கி கட்ட முடியும் என கேட்டதற்கு சென்னையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு செல்லுமாறு தனியார் வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியது. மாத சம்பளத்தை எடுக்க முடியாமல் பெண் மற்றும் அவரது கணவர் தற்போது தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
