வெளியே தொலைக் கட்டுப்பாட்டில் இயங்கும் நுழைவாயில் கதவு முதல், உள்ளே தானாகத் திறந்து மூடும் கழிப்பறைத் தொட்டி மூடி வரையில் நவீனங்களின் அத்தனை வரவுகளோடும் அந்தப் புது வீடு கட்டப்பட்டிருக்கிறது. வாசலுக்கு நேராகத் தெருவில் வெள்ளைப் பூசணி உடைந்து கிடக்கிறது. வெளியே பார்க்கிறவர்களின் கண்பட்டுவிடக் கூடாதாம். ஆனால் வண்டிகளை ஒடித்து வளைத்து ஓட்டுகிறவர்களும், கால்களைக் கூடுதலாக எட்டுவைத்து நடக்கிறவர்களும் வீட்டைத் திரும்பிப் பார்த்தபடிதான் கடக்கிறார்கள்.
ஆப்பிள் போல் முகமும், பலாச்சுளை கள் போல உதடு களும், கன்றுக்குட்டியினுடையது போன்று விழிகளுமாக இருக்கும் குழந்தையின் கன்னத்தில் வண்டுதான் உட்கார்ந்திருக்கிறதோ என ஒரு கரும் புள்ளி. வருகிறவர்கள் போகிறவர்களின் கண்பட்டுவிடக் கூடாதாம். கரும்புள்ளியே ஒரு கவர்ச்சியாக அமைய, மிக அதிக மானவர்கள் குழந்தையைக் கவனித்தபடி தான் கடக்கிறார்கள். புதிய வண்டிகளில் தொங்கவிடுவ தற்காக எலுமிச்சைகளும் குட்டித் தேங்காய் களும் மஞ்சள்களும் மிளகாய்களும் கிளிஞ் சல்களும் கறுப்பு, மஞ்சள் கயிறுகளில் கட்டிக் கடைகளில் தொங்குகின்றன. சாலை யோர தள்ளுவண்டி இட்லிக் கடையில் “கண்ணைப் பார் சிரி” அட்டை மாட்டப்பட்டி ருக்கிறது. நகைக் கடையில் கழுதைப் படம் வைக்கப்பட்டிருக்கிறது. வாசல் கத வுக்கு மேலே எலுமிச்சையோ, வேப்பி லையோ, மிளகாயோ தொங்குகிற வீடு களைப் பார்க்க முடிகிறது. “கண்ணேறு கழிப்பதில்” இந்தப் பொருள்கள் ஆற்றல் மிக்கவை என்று நம்பப்படுகிறது.
மதங்களின் சடங்காக
அழகான ஒப்பனையுடன் வெளியே புறப்படுகிறவர்களுக்கு யாருடைய கண் ணும் பட்டுவிடக் கூடாதென்று “திருஷ்டி” சுற்றிப்போடுவதை இந்து மதம் சார்ந்த பல குடும்பங்களில் பார்க்கலாம். வரன் பார்க்க, தேர்வு எழுத, புதிய வேலையில் சேர என்று கிளம்புகிறபோது முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாகக் கையில் உப்பெ டுத்துச் சுற்றி அதில் மூன்று முறை தூ தூ தூ என்று துப்பச் சொல்லி அனுப்பி வைப் பார்கள். கிறிஸ்துவ மக்களில் பலர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு உருவமோ, சிலுவை மட்டுமோ தொங்குகிற சங்கிலி யை அணிந்திருப்பார்கள். கர்த்தர் மீதான பக்திக்காக அல்லாமல், சூனியக் கண் பார்வை பற்றிய பயத்திற்காகவும் அவர்கள் அந்தச் சங்கிலிகளை அணிகிறார்கள். பைபிள் பழைய ஏற்பாட்டில் கண்ணேறு விலக்கலுக்கான பிரார்த்தனைகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. கையில் வெள்ளைக் கயிறைப் பிடித்துக்கொண்டு பிரார்த்தனை செய்கிற நடைமுறையும் உண்டு. “கர்த்தராகிய எம் பிதாவே! பொல்லாக் கண்களால் உண்டாகும் தீங்கு களிலிருந்து உம்முடைய படைப்பை விடு விப்பீராக, உம்முடைய ஊழியரைக் காப்பீ ராக,” என விண்ணப்பம் விடுப்பார்கள். இஸ்லாமிய மக்களிடையே தீவினை யைத் தடுக்க வீட்டில் குரான் ஓதுகிற பழக்கம் இருக்கிறது. யாராவது பாராட்டி னால் “இது அல்லா வழங்கியது, உங்கள் பாராட்டும் அல்லாவையே சேர வேண்டி யது,” என்ற பொருளில் “மாஷா அல்லா” என்று கூறுவார்கள். பாராட்டின் பின்னணி யில் பொறாமை இருக்குமானால் அதன் தீய விளைவைத் தடுத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இது பின்பற்றப்படுகிறது. கண் வைத்தவர் இன்னார்தான் என்று கருதப்படுகிறவர்களைத் தண்ணீரில் கைகழுவச் செய்து, அந்தத் தண்ணீரை பாதிக்கப்பட்டவர் மீது ஊற்றினால் கேடு அகன்றுவிடும் என்ற நம்பிக்கை சில நாடு களில் இருக்கிறது. “மார்க்கத்தில் இப்படிப் பட்ட போதனைகள் இல்லை. ஆனால், பிற சமயங்களிலிருந்து இஸ்லாத்தைத் தழுவி யவர்களிடையே முந்தைய பழக்கங்கள் தொடர்கின்றன. மார்க்கம் சார்ந்ததாக இல்லாமல், வாழ்கிற வட்டாரத்தின் பண் பாடு சார்ந்ததாகவும் இத்தகைய சில நடை முறைகள் இருக்கின்றன,” என்கிறார் இஸ்லாமிய ஆய்வாளரான ஒரு நண்பர். பௌத்தத்தில் கண்ணேறு நம்பிக்கை கள் இல்லை. ஆனால் சில வட்டா ரங்களில், தீய சக்திகளைத் தடுப்பதற்காக வீடுகளில் உப்பு நீர் தெளிக்கிறார்கள். அறைகளில் உப்பு நீர்க் கிண்ணங்களை வைக்கிறார்கள். கரண முத்திரை, சில மந்திரச் சொற்கள் உள்ளிட்ட பழக்கங்க ளும் இருக்கின்றன. கண்ணேறு விளைவுகளைத் தடுப்ப தற்கென்றே கண் போன்ற வில்லைகளைப் பொருத்திக்கொள்வது எகிப்தில் நெடுங்காலமாக இருந்து வருகிறது. அந்த வட்டாரம் சார்ந்த பிற சமூகங்களிலும் இந்தக் கண் வில்லைகள் புழக்கத்தில் இருக்கின்றன.
எப்படி வந்தது?
அழுக்காறு கொள்கிற குணம் பொது வாகப் பலருக்கும் இருக்கிறது. தனக்குக் கிடைக்காத ஒன்று (சொத்து, பதவி…) கிடைக்கப் பெற்ற மற்றொருவர் மீதும் இயல்பாக ஒரு பொறாமை உணர்வு ஏற்படு கிறது. இதே போல, ஒரு பெரிய ஆதா யம் தனக்குக் கிடைக்கிறபோது, மற்ற வர்களுக்கும் தன்னைப் பார்த்துப் பொறாமை ஏற்படத்தானே செய்யும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஏதோவொரு காலத்தில், இப்படி ஒரு வர் மற்றொருவரின் செல்வத்தைப் பார்த்துப் பொறாமையோடு, “இது உனக்கு நிலைக்காது,” என்று சாபம் கொடுத்தி ருக்கக் கூடும். செல்வத்தை அடைந்தவரின் பொறுப்பின்மை, தவறான செயல், கூட இருந்தவர்களின் குழிபறிப்பு போன்ற கார ணங்களால் அவர் அதை இழந்திருக்கக் கூடும். ஆனால், “அந்த ஆளுடைய கெட்ட பார்வைதான் இதற்குக் காரணம்,” என்று உடனிருந்தவர்கள் சொல்லியிருப்பார்கள். பொறாமைப் பார்வைக்கு சூனியக் கண் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும். அதை முறியடிப்பதற்கான மந்திரங்களும் சடங்கு களும் உருவாக்கப்பட்டிருக்கும். பூசை செய்யப்பட்ட தகடு, மந்திரிக்கப்பட்ட தாயத்து இன்ன பிற பொருள்கள் காப்பு களாக வழங்கப்பட்டன. அதை அணிந்து கொண்டவர் தனது உழைப்பால், அல்லது பிற வாய்ப்புகளால், இழந்த செல்வத்தை மீட்டிருப்பார். தாயத்து மகிமை மீதான நம்பிக்கை மேலும் கெட்டிப்பட்டிருக்கும். வருமுன் காப்பதற்காக முன்கூட்டியே காப்புக் கட்டிவிட்டால் கண்ணேறு பின் னேறிவிடும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டி ருக்கும். பொறாமைக்காரர்களின் கண் பட்டு விடுமோ என்ற அச்சத்தையும் அதை முன் கூட்டியே முறியடிக்க வேண்டும் என்ற ஆசையையும் பயன்படுத்திக் காப்பு வகையறா வணிகம் அமோகமாக வளர்ந்தி ருக்கிறது. வாழ்க்கையின் எல்லாத் தளங் களிலும் அறிவியலும் தொழில்நுட்பங்க ளும் தாராளமாகப் பயன்படுத்தப்படுகிற இன்றைய ஏஐ நூற்றாண்டிலேயே காப்புப் பொருள்களை எங்கும் பார்க்க முடிகிறது. முந்தைய நூற்றாண்டுகளில் எந்த அள வுக்கு இருந்திருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம்.
பாரெங்கும் பரவிய பழக்கம்
கண்ணேறு கழிப்பு உலகம் முழுவ துமே இந்தக் காலத்திலும் வலுவாக ஊன்றி யிருக்கிறது. இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத சமூகங்களைத் தவிர, மற்ற எல்லாச் சமயங்களிலும், பல்வேறு நாடு களின் கலாச்சாரங்களிலும் தீக்கண் அச்ச மும், தடுப்பு மந்திரங்களும் ஊறி வந்தி ருக்கின்றன. தொன்மைக் கால இந்திய நாடுகள், பண்டைய கிரேக்கம், ரோமா னியப் பேரரசு, மையக் கிழக்கு வட்டா ரங்கள், மையக் கடல் சார் பகுதிகள், தெற்காசியா என எல்லாச் சமூகங்களிலும் இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தை களுக்கும், பசு போன்ற கால்நடை களுக்கும் கண்ணேறு விழுந்தால் கடுமை யான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கை பல நாடுகளில் இருக்கிறது. அந்தக் கால கிரீஸ் நாட்டில் கொடுங்கண் பார்வையால் உடல் நலமும் மன நலமும் சீர்கெடும் என்று நம்பினார்கள். குறிப்பாக நீல விழிகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துமென நம்பி னார்கள். அதைச் செயலிழக்க வைப்ப தற்கு, நீலத்திற்கு நீலமே கவசமென நீல வண்ண மணிகளை உடலில் கட்டிக் கொண்டார்களாம். காலப்போக்கில் அவை நகைகளாகவும் உருவாகின. ரோமானிய சமூகத்தில், மற்றவர்களின் வயிற்றெரிச்சலால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க, மந்திரிக்கப்பட்ட பட்டைகளைக் கையில் கட்டிக்கொண்டார்களாம். மையக் கிழக்கு நாடுகளில், இஸ்லாமிய மக்களிடை யேயும் யூத மக்களிடையேயும் “நஜார்” எனப்படும் பொறாமைக் கண் நம்பிக்கை இருக்கிறது. அதை வெல்வதற்கு பச்சை, நீல மணிகளைக் கட்டிக்கொள்வார்கள். உலோகத்தில் கண் போலச் செய்து அதில் இந்த மணிகளைப் பதித்துக்கொள்வார்கள். பல நாடுகளில் கெட்ட கண்ணின் வீரி யத்தை அடக்குவதற்காகத் தரையிலோ எதிரிலோ மூன்றுமுறை எச்சில் துப்புகிற பழக்கம் இருக்கிறது. ஆண்கள் துப்பினால் ஆண்கள் மீதான கெடுபார்வையும், பெண்கள் துப்பினால் பெண்கள் மீதான கெடுபார்வையும் ஓடிவிடும் என்று துப்புகி றார்கள்.
பாசிட்டிவ் நெகட்டிவ்
“நம்முடைய பார்வைக்கு பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி ரெண்டும் உண்டு. ஒருத்தர் பொறாமையோட பார்க்கி றப்ப அவரோட நெகட்டிவ் எனர்ஜி ஒரு வைப்ரேஷனாகப் பரவும். அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதை விஞ்ஞானி களே கன்ஃபார்ம் பண்ணியிருக்காங்க தெரி யுமா,” என்று உறவினர்களின் கல கலப்பான ஒரு கூடுகையில் கூறிக்கொண்டி ருந்தார் ஒரு விருந்தினர். “புரஃபசர், எந்த நாட்டு விஞ்ஞானிகள் எப்ப நடத்துன ஆராய்ச்சியிலே இதை உறுதிப்படுத்தி னாங்க, கொஞ்சம் டீட்டெய்ல்ஸ் சொல்லுங் களேன்,” என்று கேட்டேன். திருதிருவென விழித்தவரை மற்றவர்கள் பேச்சை மாற்றிக் காப்பாற்றி னார்கள். ஒரு நண்பரின் புதுமனை புகுவிழாவுக்குக் குழுவாகச் சென்றிருந்தோம். இப்படியான நம்பிக்கைகள் மிகுந்திருந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தன்னை அவற்றிலிருந்து விடுவித்துக்கொண்டவர் அவர். பூசணித் தடங்கல் இல்லாமல் நடந்து உள்ளே சென்றவர்களை வரவேற்றவர் ஒவ்வொரு அறையாக இட்டுச் சென்று காட்டினார். வீடு சுற்றல் முடிந்ததும் மைய அறையில் அமர்ந்து காஃபியைச் சுவைத்தபடி சுற்றிப் பார்த்தோம். சுவரில் பெரிய மீசையும், உருண்ட கண்களும், தலையில் கொம்புகளும் கொண்ட கருஞ்சிவப்புச் சுடுமண் சிற்ப முகம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. நாங்கள் அதைக் கவ னிப்பதைக் கவனித்த நண்பர், “பில்டிங் கான்ட்ராக்டர் இதை அவராவே வாங்கிட்டு வந்து வெளியே முன் சுவர்ல ஃபிக்ஸ் பண்ணப் போனார். அதெல்லாம் வேணாம்னுட்டேன். ஆனா இந்த ஆர்ட் ஒர்க் அழகா இருக்கே, அதனால இங்கே மாட்டிட்டேன்,” என்று கூறினார். கடவுள் சிற்பங்களின் கலை வேலைப்பாடுகளை ரசிக்கிறவர்களான எங்களுக்கு அவரு டைய ரசனை புரிந்தது. ஆழமான நம்பிக்கை இல்லாவிட்டாலும், எதற்கும் இருக் கட்டும் என்று ஒரு முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை யாக இதைச் செய்கிறவர்களும் உண்டு. உண்மையாகவே கண்களுக்குக் கெட்ட சக்தி இருந்து அதனால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாதல்லவா!
“மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின்றார்கள்;
செய்வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின்றாய் நீ!
பொய்வண்ணப் பூசணிக்காய்! கறியுனைச்
செய்துண்டேன் உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்;
கறிவண்ணம் இங்கு கண்டேன்!”
–புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல் வரிகளை விடவா ஒரு காப்பு வேண்டும்?
முதலில் குறிப்பிட்ட சில நாடுகளின் பழங்காலப் பழக்கங் கள் பற்றித் தெரிவிக்கும் ‘கண்ணேறு மூலங்கள்: ஒரு தொன்மை நம்பிக்கையின் மீது ஒரு பார்வை’ (தி ஆரிஜின்ஸ் ஆஃப் தி ஈவில் ஐ: எ கிளான்ஸ் இன்ட்டூ அன் ஏன்சியன்ட் பிலீஃப்) என்ற ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குறுங்கட்டுரை யைப் படித்தபோது இந்தச் சிந்தனைகள் விரிந்தன. “இன் றைக்குக் கைவளைகளாக, கழுத்து ஆரங்களாக, சாவிச் சங்கிலிகளாக என ஒரு நாகரிகப் பொருளாகவும் கண்ணேறுக் காப்பு காணப்படுகிறது – ஆனால் இதன் வேர்கள் உலக அள வில் கலாச்சார மரபுகளோடு பின்னியிருக்கின்றன. நீங்கள் இதன் சக்தியை நம்பினாலும் சரி, இதன் அழகை ரசித்தாலும் சரி, தாயத்துகள் கண்ணேறு அதிர்வுகளை முறியடிப்ப தற்கென்று நிலைத்திருக்கத்தான் போகின்றன,” என்று முடி கிறது அந்தக் கட்டுரை. பொருளாதார ஏற்றத்தாழ்வு கடுமையாக இருக்கும் சமு தாயங்களில் கண்ணேறு அச்சங்களும், தடுப்பு நடவடிக்கை களும் மிகுதியாக இருக்கின்றன என்று (உண்மையாகவே நடந்த) ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்கப் பல்க லைக் கழக ஆய்வாளர் போரிஸ் கெர்ஷ்மான் அந்த ஆராய்ச்சி யை நடத்தி, ‘கண்ணேறு நம்பிக்கையின் பொருளாதார மூலங்கள்’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார். உடைமைச் சமுதாயம் நிலைத்திருக்கிற வரையில், அது உருவாக்கிய அச்சங்களும் அழுக்காறுகளும் தொடர்கிற வரையில், தாயத்துகளும் மந்திரத் தகடுகளும் கறுப்புக் கயிறு களும் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். இந்த நம்பிக்கை களிலிருந்து விடுவித்துக்கொண்டதால் இவற்றின் பிடிகளிலி ருந்தும் விடுதலை பெற்றவர்கள் மாற்றுப் பாதைகளைக் காட்டுவதும் தொடர்ந்துகொண்டிருக்கும்.