திருச்சி : சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 116 நாடு களில் இந்நோய் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. காங்கோவில் பரவத் தொடங்கிய பாதிப்பில் தற்போது மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி இருக்கிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி யுள்ளனர். இந்தியாவில் தற்போது பாதிப்பு இல்லை என்றாலும் உச்சகட்ட சுகாதார நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகி றது. குரங்கு அம்மை பாதிப்பு காற்றின் மூலம் பரவாது என்றாலும் ஏற்கனவே பாதிப்பில் இருக்கும் நபருடன் உடல் ரீதியான தொடர்பு, இரண்டு மீட்டருக்குள் மூன்று மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்போது நீர்த்துளிகள் மூலமாக இந்த தொற்று ஏற்படுகிறது. இதனை பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. திருச்சியில் விமான பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணி ஒருவருக்கு மருத்துவக்குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 28 வயதான திருவாரூரை சேர்ந்த இளைஞருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவர் திருவாரூர் மாவட்டம் தெற்குபட்டம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.